‘பெரியாழ்வாருக்குள் ஊற்றெடுக்கும் தாய்மை’




--- த.அஜந்தகுமார்

சங்கமருவிய காலத்தில் காரைக்காலம்மையார், முதல்மூன்று ஆழ்வார்கள் மூலம் ஊற்றெடுத்த பக்தி இலக்கியம் பல்லவர்காலத்தில் பெரும் உணர்வுத்தளமாக மாற்றம் கண்டது. உணர்வு வெளிப்பாட்டில் சைவ பக்தி இலக்கியங்களை விட வைணவ பாசுரங்கள் ஆழமானவை. அழகியலும் உணர்ச்சிச் செறிவும் கொண்டவை. ஆண்டாளின் கவித்துவமும் அவளின் உணர்ச்சி உணர்வுத்தளமும் உருக வைப்பவை. பெண்ணுடலினதும் மனத்தினதும் அழகியல் வெளிப்பாடல்கள் அவளது பாடல்கள்.

ஆண்டாளது தந்தைதான் பெரியாழ்வார். பெரியாழ்வார் பெருமாலுக்கு பூமாலை சாற்றும் தொண்டர். பாமாலை சூட்டிய பாவலர். மன்னனால் பட்டர் பிரான் என்று சிறப்பிக்கப்பட்டவர் இவர் இயற்றிய பிரபந்தங்கள் திருப்பல்லாண்டு( 11 பாசுரங்கள்) பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) இந்த இரண்டு நூல்களும் நாலாயிர திவ்விய பிரபங்தங்களின் தொடங்கங்களாக அமைந்து விளங்குவது இவற்றினதும் பெரியாழ்வாரினதும் சிறப்பை வெளிப்படுத்துவன.

இந்தப்பாடல்களில் எல்லாம் கிருஷ்ணன் லீலைகளை பல்வேறு “பாவ” நிலைகளில் பெரியாழ்வார் அனுபவித்துள்ளார்.

யசோதையாகவும், கண்ணன் மீது முறையிட்ட ஆய்ச்சியர் நிலையாகவும், கண்ணன் மீது காமுற்ற கன்னியர் நிலையாகவும், அக்கன்னியர் பற்றி இரங்கும் தாயாரின் நிலையாகவும் அனுபவித்துப் பாடியுள்ளார். யசோதை நிலையில் அவர் பாடிய பாடல்களே அதிகம்.

பெரியாழ்வார் திருமொழி கண்ணனின் அவதாரச்சிறப்புடன் தொடங்குகிறது. முதால் 25 திருமொழிகளில் கண்ணனது குழந்தைக் குணங்களோடும் பருவக் குறும்புகளோடும் தாயாக்க கலந்து நிற்கும் பெரியாழ்வார் தாய்க்குரிய அன்பை, கருணையை, இரக்கத்தை, கண்டிப்பை மிக ஆழமான உணர்வுத்தளத்தில் தாயாகவே மாறிப் பேசுகின்றார். அவரில் இருந்து சுரக்கும் தாய்மையின் குணத்தை நாமும் அனுபவித்து கண்ணனின் லீலா வினோதங்களோடு கலந்து விடுகின்றோம் .

பிறப்பு, திருமேனி, அழகு, தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சாப்பாணி, தளர்நடை, அண்மை வருகை, புறம் புல்கல், அப்பூச்சி காட்டல், கம்மம் உண்ணல், காது குத்தல், நீராட்டம் குழல் வாரல், பூச்சூட்டல், காப்பிடல் போன்ற கண்ணனின் குழந்தமைகளை மிகுந்த உணர்வு பூர்வமாக தாய்மயின் உணர்வுத் தளத்தில் நின்று பாடியுள்ளார்.

இவரிடம் வெளிப்படும் தாய்மையின் பரிவை, அன்பை, கருணையை, கண்ணனின் குறும்புகளை , பெருமைகளை இவர் பாடல்கள் எவ்வாறு புலப்படுத்துகின்றன என்பதை பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியூடாக நோக்க விழைகின்றேன்.

‘நீராட்டல்’ என்ற பகுதியில் யசோதையின் நிலையில் இருந்து கண்ணனை நீராட வருமாறு பெரியாழ்வார் அழைக்கின்றார். இதனை இதன் கடைக்காப்புச் செய்யுளில் ,

‘ கார்மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார்மலி கங்கை யசோதை மஞசனமாடிய ஆற்றை’
‘ பட்டர்பிரான்’ ஆகிய தான் பாடியதாகச் சொல்லுகின்றார்.

அவர் கண்ணனை நீராட அழைக்கும் போது பல்வேறு உத்திகளில் அழைத்தார். அதிலெல்லாம்

கண்ணனின் குறும்புகளும்
கண்ணனின் பெருமைகளும்
தாயாய் அவர் வைத்த அன்பும்

வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்.

சிறு குழந்தைகள் புழுதியில் அளைந்து உருண்டு புரண்டு விளையாடி விட்டு நிற்கும். ‘நீராட வா’ என்று கூப்பிட்டதும் ஓடும் - ஒளிக்கும், மறுக்கும் - மறுகும். ‘ஓடாதே வாராய்’ என்று அழைத்து நீராட வந்தால் நான் உனக்கு அது தருவேன் இது தருவேன் நீ அச்சாப்பிள்ளை, கெட்டிக்காரன் என்று பாராட்டி நீராட அழைக்கும் தாய்மைக்குணம் பெரியாழ்வாரில் மிக அழகாக வெளிப்படுகிறது.

இந்தப்பாடல் பகுதியில் கண்ணனின் குறும்புகளை மிக அழகாக இவர் சொல்லுகின்றார். வேண்ணெயைத் திருடி உண்ணும் கள்ளனாய், விளையாடி உடம்பெல்லாம் புழுதி ப+சியவனாய், கூடிச்செல்லும் கன்றுகளின் காதில் கட்டெறும்பை விட்டு அவற்றைக் கலைந்தோடச் செய்யும் குறும்பனாய், எண்ணெய்க் குடத்தை சரித்து உருட்டி ஊற்றுபவனாய், தூங்கும் குழந்தையைத் தட்டியெழுப்பியும் கண்ணைப் புரட்டி விழித்தும் வம்பு செய்பவனாய், பசுக்கன்றின் வாலிலே ஓலையைக் கட்டி விட்டவனாய் கனிகளுதிர கல்லால் எறிபவனாய் , மாட்டுத் தொழுவத்தில் கைகளால் அளைபவனாய் கண்ணனின் குறும்பு வடிவங்கள் நீள்கின்றன.

ஒரு தாயாய் கண்ணனின் குறும்புகளைப் பெரியாழ்வார் இரசிக்கிறார், விரும்புகிறார். குழந்தையின் குறும்பைக் கண்டு கொடுப்புக்குள் சிரித்து இரசிக்கும் தாயின் மனதை பெரியாழ்வாரிடம் மிக அழகாகக் காண்கின்றேன். ஆனால் ஊரார் பழி சொல்லுவார்களே என்று அஞ்சுகிறார். இதனை,

‘ப+ணித் தொழுவினில் புக்குப் புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்’
என்று தன் உணர்வை வெளிப்படுத்துகின்றார்.

தன் பிள்ளை என்ன தவறு செய்தாலும் ஒத்துக்கொள்ளாத சராசரித் தாயின் மனநிலையை உள்ளக்கிடக்கையை தாய்மை ப+ரித்துக் கிடந்த பெரியாழ்வரிடம் காண்கின்றோம். வீட்டிலே வெண்ணெயானது கண்ணன் பிறந்த நாள் முதல் இல்லாமல் போவதையும் அதைக் கண்ணன் உண்பதையும் தெளிவாகத் தெரிந்த போதும் நற்றாயான தேவகிக்காகவும் அவன் மீது கொண்ட அன்புக்காகவும் மறந்தும் அதை யாருடனும் கதைக்கமாட்டேன் என்கின்றார்.

கறந்த நற்பாலும் தயிரும் கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்

கண்ணா நீ குளிக்காமல் இருக்கப்போகிறேன் என்று விரும்பினால் அந்தக் குறும்பும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நீ குளிக்கவில்லையென்றால்,

‘ செப்பிள மென்முலையார்கள் சிறுபுறம்பேசிச் சிரிப்பர்
நப்பின்னை காணிற் சிரிக்கும்’ என்பதைச் சொல்லுகின்றார்.
மேலும்’ கண்ணன் குளிக்கவேண்டும் என்பதற்காக கண்ணனின் பெருமைகளை ஞாபகப்படுத்துகின்றார். பிள்ளைகளை ‘ அச்சாப்பி;ள்ளை , என்ரை குஞ்சல்லே, என்ரை கண்ணல்லே, முத்தல்லே என்றெல்லாம் பெருமை சொல்லிக் கொஞ்சிப ;ப+ரிக்கும் தாய்மையைப் பெரியாழ்வாரில் காண்கிறோம். ஆழ்வார், ‘ நண்ணல் அரிய பிரானே , நாரணனே , அழகனே, நம்பீ, மாணிக்கமே என் மணியே என்று கண்ணனின் நாமகரணங்களைச் சொல்லி செல்லமும் கொஞ்சுகிறார்.

நின்ற மராமரம் சாய்த்தாய் என்றும்

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய்முலை வைத்த பிரானே

என்று சகடாசுரனை வதைபுரிந்த திறத்தையும்,, பால் கொடுத்து கண்ணனின் உயிரை எடுக்க நினைத்த ப+தனை அரக்கியின் முலையில் பாலைக் குடித்தே அவளின் உயிரை எடுத்ததையும் பாம்பு வடிவில் வந்த அகாசுரனைத் துன்புறுத்தியது என்றும் நீளும் அவனின் வீரப்பெருமையையும் ஆழ்வார் பேசுகின்றார்.

ஒலிகடல் ஓத நீர் போல் வண்ணம் அழகிய நம்பீ என்று அவன் அழகில் மயங்குகிறார்.
நீ குளிக்க வந்தால் உனக்கு அது தருவேன் இது தருவேன் என்று ஆசையூட்டும் தாய்மையை ஆழ்வாரில் காண்கிறோம். கண்ணா உன்னை நீராட்டுவதற்காக எண்ணைய்,சிகைக்காய், காய்ச்சின நீரோடு நெல்லிக்காயை கடாரத்தில் நிரப்பியும், மஞசள், செங்கழுநீரின் வாசிகை, நாறு நாந்து, அஞசனம் சகிதம் காத்திருப்பதைச் சொல்லுகின்றார்.
மேலும் நீ குளித்த பிறகு – புசிப்பதற்கு
‘அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்’ என்று ஆசையூட்டுகிறார். ‘ உண்ணக் கனிகள் தருவேன்’ என்று விருப்பூட்டுகிறார்.

நீ குளிக்க வராவிட்டால் உன்னை என்னுடன் சேர்ந்து படுக்கவும் விடமாட்டேன் என்று கண்டிப்பும் உள்ளே கரந்து நிற்கும் அன்பும் சேர வெருட்டுகிறார்.

இவ்வாறாக பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியிலே கண்ணனின் குறும்புகள், பெருமைகள், யசோதையாகவே மாறிவிட்ட பெரியாழ்வாரின் தாய்மை என்பன ஒன்று சேர்ந்த ஒரு கவித்துவத்தை அனுபவிக்கமுடிகின்றது.

3 கருத்துரைகள்:

வைகறை நிலா said...

இந்த கட்டுரை மிகவும் அற்புதமாக இருக்கிறது.
கண்ணனை நினைக்காத நெஞ்சம் உண்டோ உலகில்..?

த. அஜந்தகுமார் said...

தங்கள் கருத்துக்கு நன்றி

Achchuthan Yogarajah said...

இந்த கட்டுரை மிகவும் அற்புதமாக இருக்கிறது.

Post a Comment