ஈழத்துத் தமிழ்க் கவிதைகளின் தனித்துவம்: சேரனின் கவிதைகளை முன்வைத்து ஓர் ஆய்வு


-தருமராசா அஜந்தகுமார்

1.ஈழத்துத் தமிழ்க்கவிதைகளின் தனித்துவம் ஓர் அறிமுகம் 

தமிழ்க்கவிதைக்கென்றொரு செழுமையான பாரம்பரியம் இன்று வரை நிலைத்தும் தொடர்ந்தும் வருகின்றது. இதில் ஈழத்துத் தமிழ்க்கவிதைகளின் வகிபாகம்  தனித்துவமானது. ஈழத்துப் பூதந்தேவனாரில் இருந்து இன்றுவரை ஈழத்துத் தமிழ்க்கவிதைக்கென்றொரு பாரம்பரியம் இருக்கிறது.  தமிழக இலக்கியத் தடத்தோடு  இணைந்தும் தொடர்ந்தும் வந்த ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபு 1950 களில் பேச்சோசைப்பண்பினைப் பெற்றதில் இருந்து புதிய திருப்பத்தைக் காண்கின்றது.  முற்றிலுமான தனித்துவப் போக்கு 1980 களின் பின்பே உருவாகத்தொடங்கியது. 1980களில் இருந்து இலங்கையில் வலுப்பெற்ற இன முரண்பாடுகளும்இ மோதல்களும்இ அகதிவாழ்வும்  மரணத்துள் வாழும் சூழலும் தமிழக அனுபவங்களைக் கடந்த புதிய அனுபவத்தளங்களை பாடுபொருள்களை ஈழத்து இலக்கியத்திற்கு அளித்தது. இவ்வாறாக வாய்த்தஇ புதிய சமூகஅனுபவத்தை மிக உக்கிரமாக ஈழத்துத் தமிழ்க்கவிதை வெளிப்படுத்தியது. ஆபிரிக்கஇ தென்அமெரிக்கஇ பலஸ்தீன மொழிகளுக்கு பிறகு தமிழில் வேறெங்கும் வாய்க்காத இரத்தமும் சதையுமான அனுபவங்கள் ஈழத்துக் கவிதைகளில்தான் உணர்வுபூர்வமாக வெளிப்படத் தொடங்கின. தமிழரின் நசிக்கப்பட்ட குரல்வளைகளில் இருந்து எதிர்ப்பு குரல்களும்இ வலிகளும்இ உருவ உள்ளடக்க புதுமையுடனும்இ உறையவைக்கும் படிமங்களுடனும் வெளிப்பட்டு ஈழத்து தமிழ் கவிதை செழிப்புறத் தொடங்கியது. எண்பதுகளில் இருந்து செழிப்புற்ற தமிழ்கவிதையின் மையப்புள்ளியாக இருந்த சேரனின் கவிதைப் பங்களிப்பை தனித்துவத்தை மதிப்பிடுவதாகவே இக்கட்டுரை அமைகிறது.

2. சேரனின் கவிதைகள் ஓர் அறிமுகம்

சேரன் ஈழத்து நவீன தமிழ்க்கவிதையின் பிதாமகரான மஹாகவியின் மகன். இரண்டாவது சூரிய உதயம் (1983) யமன் (1984) கானல்வரி (1989) எலும்புக்கூடுகளின் ஊர்வலம் (1990) எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993) “நீ இப்போதும் இறங்கும் ஆறு - சேரன் கவிதைகள் ஒரு நூறு” (2000). “மீண்டும் கடலுக்கு” (2004) என்று இவரது ஏழு கவித்தொகைகள் வெளிவந்திருக்கின்றன. சேரன் 1975இல் எழுதத் தொடங்கி இன்றைய ‘அலைந்துழல்வு’ வாழ்க்கை வரையும் தொடர்ந்து இயங்கிவருபவர்.  மஹாகவியூடாக நுஃமான்இ சண்முகம் சிவலிங்கம் என்று தொடரும் ஒரு கவிதைப்பாரம்பரியத்தின் முக்கிய பிரதிநிதிதான் சேரன். 1980 களுக்குப்பிறகு கிளைத்த இன ஒடுக்குமுறையின் வன்முறைஇ வன்முறைக்கெதிரான போர்க்குரல்இ புலம்பெயர்வு அனுபவங்கள் என்ற தளங்களில் சேரனின் கவிதைகள் இபரிணாமம் அடைந்தபடி மிகத்தீவிரமாகப் பயணிக்கின்றன. இவற்றில் புரட்சியும் காதலும் மனிதநேயமும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

3.  சேரனின் கவிதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும்

சேரனின் கவிதைகளின் பாடுபொருளினை
1.    இனமுரண்பாட்டினாலும் வன்முறையினாலும் எதிர்ப்புக்குரலாயும் சுயவிமர்சனங்களாகவும் எழுகின்ற கவிதைகள்

2.    காதல்  காமம் என்ற புதிர்ப்பாதைகளில் பயணிக்கும் கவிதைகள்

3.    சமூகப் பிரச்சினைகளை மிகத் தீர்க்கத்தோடு அணுகும் கவிதைகள்

4.    புலம்பெயர் அனுபவங்களைப் பதிவு செய்யும் கவிதைகள் 
என்று மிக மேலோட்டமாக நாம் வகைபிரித்துக் கொள்ளலாம்.

3.1. சேரனின் கவிதைகளில் இன ஒடுக்குமுறையும் எதிர்ப்புக் குரலும் :

இன ஒடுக்குமுறைச் சூழலில் இருந்து முகிழ்த்த தலைமுறைக் கவிஞனே சேரன். இனவாதத்தின் கொடுமைகளை 1983இன் கலவரங்களை அதன்வழி கிளைத்த புரட்சியின் குரல்களை மரணத்தின் வாதைகளை வலிகளை போராட்டத்தின் மீதான விமர்சனங்களை மிகக் கலாபூர்வமாக வெளிப்படுத்தியதால் சேரன் மிக முக்கியமானவர்.  ‘எனது நிலம்! எனது நிலம்’ என்று ஓங்கி ஒலித்த இ சேரனின் கவிக்குரல்:  நகரம் எரிக்கப்பட்டதும் மக்கள் முகங்களை இழந்ததும்இ நிலத்திலும் காற்றிலும் கூட அந்நியப்பதிவு சுவறியதும்இ ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்துஃ எழுந்து வருக’1 என்றும்  ‘தெருவில் எமது ஃதலைவிதி உள்ளதை ஃ நெருப்பிலே எமது நாட்கள் நகர்வதை ஃஅனுமதிக்கிறாயா? ஃ ‘இல்லை….’ ஃ எழுந்து வெளியில் வாஃ தெருவில் இறங்கு’2  என்றும் போருக்கான புரட்சிக் குரலைச் சேரனிடம்  கேட்கிறோம். மரணத்தின் வேலிக்குள் வாழ்க்கை அகப்பட்டதை அதன் யதார்த்தத்தை சேரன் புதிய படிமங்களுடன் எமக்குள் இறக்குகின்றார்.
“………….”ஃ பிறகு? ஃ பிறகென்ன? ஃ எல்லாம் வழமைப்படி ஃ காலை வெறும் சூரியன் ஃ வெய்யில்  நிலத்தில் ஃ எனக்கு மேல் ஃ  புல்” 3
என்று மிகச் சாதாரணமாக மரணத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் எழுதிவிடுகின்றார். வேறொரு கவிதையில்இ ‘இரத்தம் சிந்திய நிலங்களின் மீது ஃ  நெல் விளைகிறது! சணல் பூக்கிறது ஃ  மழை பெய்கிறது’4    என்கிறார். இதற்கு மேல் இன்னும் ஒருபடி மேலே போய்இ “நாங்கள் உயிர்வாழ்வதற்கான ஃ நிகழ்தகவு ஃஅச்சந்தரும் வகையில் ஃ
குறைந்து போய்விட்டது”5        என்று பதிவு செய்கின்றார். சேரன் அக்காலத்தை வெறுமனே பதிவு செய்தவராக மாத்திரம் இருக்கவில்லை. ஒரு இடத்தில் தனித்து நின்றுவிட்டவரும் இல்லை.  “ஈழத்துப் போர் குறித்து எழுதப்பட்ட ஏராளமான கவிதைகளுக்குப் போர் ஆவணங்கள்இ காலப்பதிவுகள் என்ற முக்கியத்துவம் மட்டும்தான் உள்ளது என்று இப்போது தோன்றுகிறது”6.  என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் அதையும் மீறி சொல்முறைகளின் படிமங்களும்இ புதுமைகளும் அக்கவிதைகளை கனப்படுத்துகின்றன.
“இரவுகளில்ஃஅநேகமாக எல்லோரும்ஃபயங்கரமான கனவுகளைக் ஃகாண்கிறார்கள் ஃஅவற்றில் ஃ ஹெலிகொப்டர்கள்ஃ தலைகீழாகப் பறக்கின்றனஃ கவச வாகனங்கள்ஃ குழந்தைகளுக்கு மேலாகச்ஃசெல்கின்றன.ஃ நமது சிறுவர்கள்ஃ கடதாசியில் துப்பாக்கி செய்துஃ விளையாடுகின்றார்கள்.”7 என்பதில் வரும் படிமங்கள் முக்கியமானவை.
எனது நிலம் என்று ஓங்கி ஒலித்தும்இ மரணங்கள் கண்டு துவண்டும்இ புரட்சிக்காய் அறைகூவியும் நின்ற சேரனிடம் மனிதநேயமும்இ சமூகவிமர்சனங்களும் அடிச்சரடாய் ஓடிக்கொண்டிருந்தன.  ‘என் கவிதை தொடங்குகிறதுஃ கண்ணீரிலும் இரத்தத்திலும்ஃ கரைகிற வாழ்க்கையில் இருந்து’8 என்று கூறிய சேரன் வெறும் புரட்சி அழைப்போடு சுருங்கிவிடாதுஇ 1990களில் தமிழ்த்தேசியத்தின் மோசமான பக்கங்களையும் மிகத்துணிவோடு சாடினார். போருக்கு அழைத்த அதே சேரன்இ ‘வெற்று வார்த்தைப்பந்தலிலே உம் நினைவைச் சோடித்துத் தெருத் தெருவாய்ப் பாடி வைத்த பரணியெல்லாம் செத்த வீட்டு வாசலிலே வெட்டி இட்ட வாழைகளாய் நாலாம் நாள் உதிர்கிறது ஞாபகமும் உதிர்கிறது’9 என்று பாட நேர்கிறது. அதன் உச்சமாய்இ
 ‘கறைபடியாக் கரங்களெனத் திக்கெட்டும் பறையறைந்து கவிசொன்ன என் வாய்க்குச் செருப்படி’10 என்று பாடி நிற்கின்றது. ‘எம் பரம்பரை போர் புரியட்டும் ‘ என்று சொன்ன அதே சேரன் போராளிக் குழந்தைகளைக் கண்டு மனம் பதறுகிறார். இதை ஜெயமோகன்இ ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருவதற்கு அறை கூவிய சிறுவன் ஒரு தந்தையாக மாறிவிட்டிருக்கிறான்’11 என்று  குறிப்பிடுவது முக்கியமானது. இது சூழலின் மாற்றத்தையும்இ சேரனின் அரசியல் கருத்துநிலை மாற்றத்தையும்இ பதிவு செய்கின்றது.
3.2 சேரனின் கவிதைகளில் சமூக நோக்கு 
சேரனிடம் வெளிப்படும் சமூக சிந்தனைகள் மிக முக்கியமானவை. பெண்களின் நூற்றாண்டாய்த் தொடரும் துயரையும்இ சாதிப்பிரச்சனைகள்இ சுரண்டல்கள்இ எல்லாம் சேர்ந்த ஒரு மனித நேயக் குரலை சேரனின் கவிதைகளில் காணமுடிகிறது. சாதி என்ற பெயரில் மனிதனை மனிதன் அடக்கும் தமிழரின் சாதி     வெறியை மிகவும் உக்கிரமாக சேரன் எதிர்த்தார். ‘முதுகு நாண் கலங்கள் மீது     பூஞ்சண வலைகளாய் சாதிப்பிரிவினை’ பின்னி இருப்பதைக் கண்டுஇ கொதித்து ‘நிர்வாணமாகத் தமிழர் எல்லோரும் தெருக்களில் திரிக’12 என்று சபித்தார்.  கூலிப்பெண்களின் சேற்றுக்குள் இறங்கும் வாழ்க்கை அவர்களுக்கு சேறையும் மற்றவர்களுக்கு சந்தனத்தையும் பூசுவது கண்டு ‘இவர்களது பூமி இருள் தின்னும்இ பொழுது விடிந்தாலும்’13 என்று இரங்குகின்றார்.  சமூகத்தின்  மூடநம்பிக்கைகளும் சீதனமும் ஒரு பெண்ணை முதிர்கன்னியாக்குவதைஇ  “காத்திருஃ உனக்காய் இவர்களனைவரும் ஃ கொண்டுவருவர்.ஃ’ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஃபொன்னிற இறகுகள்ஃ தலையில் மினுங்கும் ஃதூயசத்திரியனை’ஃ  பார்த்திரு ஃ உனது கூந்தல் வெளுத்த ஃ  பின்பும் கூட’14 என்று கோபத்தோடு சொல்லுகிறார்.
3.3 சேரனின் கவிதைகளில் காதலும் காமமும்
சேரனின் கவிதைகளில் முக்கிய பங்கினைக் காதலும் காமமும் பெற்றுக் கொள்கின்றன. போர் வெடித்த சூழலிலும்இ புலம்பெயர்ந்த நேரத்திலும் சேரனின் உள்நின்று சுடரும் ஒன்றாய்க் காதலும் காமமும் தீவிரம் பெறுகின்றன. தன்னிடம் வெளிப்படும் புரட்சியை எப்படி தீவிரமாக சேரன் வெளிப்படுத்தினாரோ அவ்வாறே காதல்இ காமத்தையும் வெளிக்காட்டினார்.  ‘காதல்இ காமம்இ சுகிப்புஇ இன்பம் துய்த்தல் என்று வருகிறபோது ….எமக்கு நாமே பூட்டிக் கொண்டிருக்கும் ஒழுக்கத்தளைகளும் மரபுஇ பண்பாடு என்பவற்றின் பிழையான போலித்தனமான புரிந்து கொள்ளல்களுக்கூடாக எமது சமூகங்கள் கட்டமைத்து வைத்திருக்கிற மாபெரும் ஒழுக்கச்சிறைகளும் உவப்பானவையல்ல.’15  என்று இதற்கு விளக்கம் கூறினார்.  ‘உன் நினைவில் வருகிறதா அந்த மழைநாள்’ என்ற நினைவுக் கிளர்தலிலும் ‘என் சின்னப்பெண்ணே எமது அன்றைய சூரியன் அன்றே மறைந்து போயிற்று’ என்று இறந்த காலத்தின் காதலியினையும்இ நீளக்காலூன்றி ஒரு கொக்காய் தவமிருத்தலையும்இ தன்னை வருட அவள் விரல்கள் இல்லையாகிவிட்டபோது நடுவழியில் திசையறியாப் பறவையாகிவிடுவதையும்இ காதலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டபோது மனதில் கிளை விரித்திருந்த மரங்களுக்கு இலை உதிர்ந்து விடுவதையும்இ ‘துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும் என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் உயிர்ச்சுவட்டை எறிந்தவளிடம்’16என்று துயரினை க் கிளர்த்தும் காதலினையும்இ வயது ஏறிய பின்இ பெரும் போகத்தில் திளைத்தலைஇ ஆடையற்ற முதுகில் எழுதிய முத்தத்தின் காயங்களைஇ அவளும் தானும் இருந்த அறை அவள் போனது நூற்றுக்கணக்கான அறைகளில் ஒன்றாக நிறமற்றுப்போய்விடுவதைஇ கோபத்துடன் கல்வி செய்த அன்று:
‘ஒரே நேரத்தில் மரணதொலைவுஃமுடிவற்ற இன்பம்ஃ முடிவற்ற துயரம்ஃஎல்லாவற்றுக்கும் நெருக்கமாக இருந்தோம்’17 என்றும் இன்னும் இன்னும் பாடுகிறார்.  ஆரம்பகாலக் காதல்கவிதைகளைவிட பிரசவக்கோடுகளைத் தடவும் விரல்களில் இருந்து எழுந்து வரும் கவிதைகள் தீவிரம் உடையதாக விளங்குவதைக் காணலாம்.   ‘மதுவில்  நனைந்த ஆடையைக் கழற்றத்  ஃதனியிடம் தேவையா உனக்கு? ஃசதுக்கத்தின் நடுவில் கழற்றிவீசு ஃதங்கக்காசால் உன்னை மறைப்பேன்’18
என்னும் சேரன் குரல் காமத்தின் தீவிர குரலாகிவிடுகிறது.
3.4 சேரனின் கவிதைகளில் புகலிட அனுபவங்கள்
1980களுக்குப் பிறகு கிளைத்த கவிமரபின் அடுத்த கட்டமான புலம்பெயர் கவிதைகளிலும் சேரனின் கவிதைகள் இணைந்து கொள்கின்றன. அங்கு அவரது குரல் நிலமற்ற சோகத்திலும்இ நிலத்தின் நினைவு நிரம்பிய மதுக் கிண்ணத்தோடும்இ நிறப்பாகுபாட்டின் அவலத்தோடும் ஒலிப்பதைக் காணலாம்.
‘….ஊர்ஃநிலையற்றுத் தவித்து என்னைத் தூக்கி வெளியே வீசியது’19 என்று தான் புலம்பெயர்க்கப்பட்டதைக் கூறிஇ ஒளி வராத பனிபாலையில் தான் தஞ்சமாகியதைக் கூறுகிறார். அங்கு ‘மரங்களற்ற வெள்ளைப் பனிக்காட்டில் தனித்தேன்’ என்றும் ‘இப்போதோ நான் தனித்த அசோகமரம்’ என்றும்இ ‘பனிப்பாறை தனித்தீவுக் குளிர்நாளில் எனக்கென்ன எதிர்காலம்?’ என்றும் புகலிடத்தனிமையிலும் விரக்தியிலும் கவிதை ஒலிப்பதைக் காண்கிறோம்.. காரணமற்ற நியாயமற்ற மரணங்கள் கண்டு ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக’ என்று அறை கூவிய குரல் இப்போதுஇ 
‘கேட்டுக் கவலையுற்றுத் துன்புறுவோம் ஃ பின்னர் வழமைப்படிஇ என்புருக்கும் ஃபனிக்குளிரில் ஃஇறங்கிப் போய்விடுவோம் வேலைக்குஃ பொழுதில்லை அழுவதற்கும்’20  என்று ஆகிவிடுவதையும் உணர்த்துகிறார்.
இவ்வாறு சேரனின் கவிதைகள் பல தளங்களிலும்இ தடங்களிலும் ஓயாது இயங்குவதைக் காணலாம். ஓவ்வொன்றின் வெளிப்பாட்டிலும் வடிவநேர்த்தியும்இ புதுமையும்இ மொழியாற்றலின் வீச்சும்இ படிமத்தின் ஆழமும் மிக கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. இவற்றைத் தீவிரமாக மதிப்பிட இச்சிறு கட்டுரை இடமளிக்காது  காட்டப்பட்ட உதாரணங்கள் சேரனின் கலாபூர்வத்தையும் அழகியல் பெறுமானத்தையும் ஓரளவிற்கேனும் எடுத்தியம்பவல்லன.

4.முடிவுரை
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து இன்று மரங்களற்ற பனிக்காடு வரைக்கும் விசாலித்து பயணம் செய்யும் சேரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க்கவிதை மரபில் மாத்திரமன்றி தமிழ்க்கவிதை மரபிலும் தனியிடத்தைப் பெறுவன. சேரனே ஒரு கவிதையில் சொல்வது போல்இ
‘எனது கவிதை சிக்கலற்றது ஃ ஆழமான உணர்ச்சிச் சுழிப்புகளில் ஃ அது தன்னுடைய ஆழத்தை இழக்கவில்லை’21
என்பது உண்மையானது ஆகும். சேரனில் கருத்து மற்றும் கவித்துவ தொடர்ச்சியைஇ வளர்ச்சியைக் காணமுடிகின்றது. ‘என்னுடைய முழுக்கவிதைகளையும் எப்போதாவது எழுதி முடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை’ என்று சேரன் சொல்லுகிறார். ஆனால் அவர் இதுவரை எழுதிய கவிதைகளே அவரை பெரும் கவிஞனாய் வாழவைக்கும் தகுதி கொண்டவை. ஈழத்துத் தமிழ்க் கவிதையை தனித்துவப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் சேரனும் ஒருவர் என்பது ‘உண்மைஇ வெறும் புகழ்ச்சியில்லை.”

அடிக்குறிப்புகள்
1.    சேரன்இ (ஆகஸ்ட் 2000) நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ காலச்சுவடுஇ பக்கம் 79
2.    மேற்படிஇ பக்கம் 69
3.    மேற்படிஇ பக்கம் 38
4.    மேற்படிஇ பக்கம்
5.    மேற்படிஇ பக்கம் 94
6.    ஜெயமோகன்இ(2010) இரத்தம் காமம் கவிதை - சேரனின் கவியுலகுஇ ஜெயமோகனின் இணையத்தளம்
7.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம் 95
8.    மேற்படி பக்கம் 154
9.    மேற்படி பக்கம் 184
10.    மேற்படி பக்கம் 118
11.    ஜெயமோகன்இ இரத்தம் காமம் கவிதை - சேரனின் கவியுலகுஇ றறற.தநலயஅழாயn.in
12.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம் 39
13.    மேற்படி பக்கம் 33
14.    மேற்படி பக்கம் 51
15.    சேரன் நேர்காணல்கள் இகடவுளும்இ பிசாசும்இ கவிஞனும் (டிசம்பர் 2006)    காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 33
16.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம்185
17.    சேரன்இ மீண்டும் கடலுக்குஇ( டிசம்பர் 2004 ) காலச்சுவடு பக்கம் 32
18.    மேற்படி பக்கம் 72
19.    மேற்படி பக்கம்  40
20.    மேற்படி பக்கம் 54
21.    நீ இப்பொழுது இறங்கும் ஆறு  - சேரன் கவிதைகள் ஒரு நூறுஇ பக்கம்196
    

இலக்கியமும் பாலியலும் ஒரு தொடர் சிந்தனைக்கான முன்னுரை
த.அஜந்தகுமார்

இலக்கியம் என்ற துறை தனியே கலை வெளிப்பாடாக மாத்திரம் குறுகிவிடுகின்ற ஒன்று அல்ல. அது பல்வேறு சமூகத்துறைகளுடனும் ஊடாட்டம் கொள்ளுகின்ற துறையாகும். இலக்கியம் பல்வேறு கோட்பாடுகளுடனும் துறைகளுடனும் ஓயாது ஊடாடுவது. அதனால்தான் இலக்கியம் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத கூறாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்தக்கட்டுரை இலக்கியத்துக்கும் பாலிய லுக்குமான தொடர்பையும் அதன் வெளிப்பாட்டின் பலம், பலவீனம் என்பவற்றுக்கான ஒரு சில புள்ளிகளை இனங்காட்டுவதாகவும் ஒரு தொடர் முயற்சிக்கான முன் ஆரம்பமாகவும் விளங்கு கின்றது.
‘ஒடுக்கப்பட்ட பாலியலின் வெளிப்பாடுதான் இலக்கியம்’ என்று ப்ராய்ட் கூறினார். சங்க இலக்கி யங்களில் இருந்து இன்றைய பின்நவீன இலக்கி யங்கள் வரை பாலியல் என்பது இலக்கியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதனை ஜெயமோகன்,
‘‘எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை வேதங்களில், பைபிளில்... இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தில் இரு சிகரங்களாகச் சொல்ல வேண்டும்... மனிதர்களுக்கு பாலுணர்வென்பது மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிப்படையான இச்சை. இச்சைகள் அனைத்துமே ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனை யைப் பாலுறவு சார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர் வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது’’ என்று மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
இலக்கியத்தில் பாலியலை எழுதுதல் என்பது சிலரைப் பொறுத்தவரை அருவெருக்கத்தக்க ஒன்றாகவும் சிலரைப் பொறுத்தவரை கொண்டாடத் தகுந்த ஒன்றாகவும், சிலர் தேவைப்படும் இடத்தில் அதன் பிரயோகத்தை புரிந்தவராகவும் இருப்பதைக் காணலாம். சிலர் பாலியல் என்பதைத் தமது கோட்பாடுகளுக்கான அரசியலாகவும், பிரபல்யத்துக் கான அரசியலாகவும் பயன்படுத்து வதும் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது.
1. பாலியல் அனுபவங்களை இயல்பாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தல்
2. பிரபல்யத்துக்கான ஒரு உபாயம்
3. கோட்பாடுகளுக்கான ஒரு வழிமுறை அரசியல் சாதியம் பின்நவீனம் பெண்ணியம் இப்படி...
4. சமூக வக்கிரங்களை வெளிப்படுத்தல்
5. இன ஒடுக்குமுறையை வெளிப்படுத்தல்
என்று பல தளங்களில் பாலியல் இலக்கியத்தில் கையாளப்படலாம்.
ஈழத்தில் எஸ்.பொவின் ‘தீ’யில் இருந்து இன்று உமாவரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ வரை பாலியல் அனுபவங்கள் மிக நேரடியான முறையில் இலக்கியத்தில் பயில்வதை நாம் காணலாம். தெணியானின் ‘காத்திருப்பு’ நாவல் பாலியல் உறுப்புகள் எதையும் சுட்டாது அதன் வக்கிரத்தின் வாடையின்றி ‘கத்தியில்’ பிரயாணம் செய்கிறது. டானியலின் நாவல்கள் தெணியானின் படைப்புகள் சிலவற்றில் சாதியப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு அரசியலாக பாலியல் பயில்கிறது. இன்றைய பெண்ணியப் படைப்புகளில் பாலியல் திருப்தியீனங்கள், பாலியல் வக்கிரங்கள் நேரடியாக முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல் முக்கிய இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் பின்நவீனத்து வம் என்பதே பாலியல் வழியாக எல்லைகளைக் கடத்தல் என்ற ‘பார்வை’ ஆழமாக ஊன்றி பாலியல் உறுப்புகளாலும் கதைகளாலும் இலக்கியப் படைப்புகள் நிறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டார் கதைகளில் உள்ள பாலியல் கதைகளைத் தெரிந்தும் தொகுதிகள் வந்து கொண்டிருக்கின்றன.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாலியலும் இலக்கியமும் ஒவ்வாமைத் துறைகள் அல்ல. ஆனால் பாலியல் என்பது வெறும் மலினமான ஒன்றாக மூன்றாம்தர எழுத்தோடு எழுதப்பட்டு பின்நவீனத்துவ லேபிள் பெறும் போதே பிரச்சினை வருகிறது.
பாலியல் உறுப்புகள் வந்து விட்டால் இலக்கியத்தில் அது ஒரு பாவம் இல்லைத்தான். தேவையானபோது நாம் அதை எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூசத் தேவையில்லை. அத்தோடு சில படைப்புகளில் வரும் பாலியல் உறுப்புகள் அதன் அர்த்தத்தை கடந்து விடுகின்றன.
நற்றிணையில் ‘ஒரு முலை திருகிய திருமாவுன்னி என்று வரும் போது அங்கு திருமாவுன்னியின் ஆணுக்கு எதிரான ஆவேசமான போக்கையே நாம் காண்கின்றோம். கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் வருகின்ற ‘யோனி’ தனியே உறுப்பு அல்ல. இன ரீதியாக ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குமுறல் - ஆவேசம், மனுஷ்ய புத்திரனின் குருடனின் சுயமை துனத்தை ஒட்டிப்பார்க்கும் சோடிக்கண்களைப் பற்றிப் பேசும் கவிதையில் பிரதானப்படுவது சுயமைதுனம் அல்ல - சமூகவக்கிரத்தின் மீதான விமர்சனம்தான்.
எனவே பாலியல் உறுப்புகள் எழுதுவது பாவகாரியம் அல்ல. தேவையான இடங்களில் கருத்துப் புலப்பாட்டுக்கான ஆழமான வடிவமாக இது விளங்குவதையும் காணலாம். அதே நேரத்தில் வெறும் பாலியல் உணர்வை கிசுகிசு உணர்வுடன் எழுதிவிட்டு இதற்குள் ‘ஆயிரம் அர்த்தங்கள்’ உண்டு என்று கதையளக்கும் போதுதான் கோபம் வருகிறது.
தமிழகத்தில் சாருநிவேதிதா, ஸ_ரோடிகிரி, ராஸலீலா என்று பல நாhவல்களில் பாலியலை மிகவெளிப்படையாக எழுதி வருவதைக் காண் கின்றோம். அவற்றின் சமூகப்பயன் என்ன என்கின்ற போது பெரும் கேள்விகள் எழுந்துவிடுகின்றன.
ஈழத்தில் அண்மைக்காலமாக இராகவனின் எழுத்துகள் பாலியலை எந்த கூச்சமும் இல்லாமல் மிக வெளிப்படையாக எழுதிச் செல்கின்றன. அவை தனியே பாலியல் நெருக்கீடுகள் அனுபவங்கள் என்ப வற்றைத் தாண்டி சில சமூக தேச ஒடுக்க நிலை களைப் பேசுவவையாக இருந்தாலும் அதில் துருத்திக் கொண்டு நிற்பது பாலியலே. அவரின் சிறுகதைகள் தனி ஆய்வுக்கு உரியன. எஸ்.பொ வின் ‘காலம்’ இதழ் சிறப்பு மலரில் எஸ்.பொ வின் ‘பால்வீதி’ யில் ஊடாக தானும் பயணித்து பாலியல் ஊடாக பல ஒடுக்கு முறைகளை எழுதவேண்டும் என்று இராகவன் வாக்குமூலம் தந்ததும் ஞாபகம் வருகின்றது.
இலக்கியத்தில் பாலியல் என்பது இன்று நேற்று கையாளப்படத் தொடங்கிய விடயமல்ல அது அழகியல் உணர்வுடன் சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிட்டன. இன்று வரைக்கும் இப்பண்பு தன்னியல்பாகவும், அரசியலாகவும், மூன்றாந்தர எழுத்தாகவும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றது.
‘தமிழ் இலக்கியங்களில் பாலியல்’ என்ற தலைப்பில் எழுதும் போது அது நீண்டதாகிவிடலாம் எனவே அடுத்து வரும் இதழ்களில் ஈழத்த நாவல்கள் சிறுகதைகள், கவிதைகளில் பாலியல் எவ்வாறு பயின்று வருகின்றது என்பதை எனக்கு எட்டிய படைப்புகளைக் கொண்டு ஆராய உள்ளேன் அவை எமது படைப்புச் செயற்பாட்டில் சில விவாதங்களையும் ஆரோக்கியங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.’

‘பெரியாழ்வாருக்குள் ஊற்றெடுக்கும் தாய்மை’
--- த.அஜந்தகுமார்

சங்கமருவிய காலத்தில் காரைக்காலம்மையார், முதல்மூன்று ஆழ்வார்கள் மூலம் ஊற்றெடுத்த பக்தி இலக்கியம் பல்லவர்காலத்தில் பெரும் உணர்வுத்தளமாக மாற்றம் கண்டது. உணர்வு வெளிப்பாட்டில் சைவ பக்தி இலக்கியங்களை விட வைணவ பாசுரங்கள் ஆழமானவை. அழகியலும் உணர்ச்சிச் செறிவும் கொண்டவை. ஆண்டாளின் கவித்துவமும் அவளின் உணர்ச்சி உணர்வுத்தளமும் உருக வைப்பவை. பெண்ணுடலினதும் மனத்தினதும் அழகியல் வெளிப்பாடல்கள் அவளது பாடல்கள்.

ஆண்டாளது தந்தைதான் பெரியாழ்வார். பெரியாழ்வார் பெருமாலுக்கு பூமாலை சாற்றும் தொண்டர். பாமாலை சூட்டிய பாவலர். மன்னனால் பட்டர் பிரான் என்று சிறப்பிக்கப்பட்டவர் இவர் இயற்றிய பிரபந்தங்கள் திருப்பல்லாண்டு( 11 பாசுரங்கள்) பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) இந்த இரண்டு நூல்களும் நாலாயிர திவ்விய பிரபங்தங்களின் தொடங்கங்களாக அமைந்து விளங்குவது இவற்றினதும் பெரியாழ்வாரினதும் சிறப்பை வெளிப்படுத்துவன.

இந்தப்பாடல்களில் எல்லாம் கிருஷ்ணன் லீலைகளை பல்வேறு “பாவ” நிலைகளில் பெரியாழ்வார் அனுபவித்துள்ளார்.

யசோதையாகவும், கண்ணன் மீது முறையிட்ட ஆய்ச்சியர் நிலையாகவும், கண்ணன் மீது காமுற்ற கன்னியர் நிலையாகவும், அக்கன்னியர் பற்றி இரங்கும் தாயாரின் நிலையாகவும் அனுபவித்துப் பாடியுள்ளார். யசோதை நிலையில் அவர் பாடிய பாடல்களே அதிகம்.

பெரியாழ்வார் திருமொழி கண்ணனின் அவதாரச்சிறப்புடன் தொடங்குகிறது. முதால் 25 திருமொழிகளில் கண்ணனது குழந்தைக் குணங்களோடும் பருவக் குறும்புகளோடும் தாயாக்க கலந்து நிற்கும் பெரியாழ்வார் தாய்க்குரிய அன்பை, கருணையை, இரக்கத்தை, கண்டிப்பை மிக ஆழமான உணர்வுத்தளத்தில் தாயாகவே மாறிப் பேசுகின்றார். அவரில் இருந்து சுரக்கும் தாய்மையின் குணத்தை நாமும் அனுபவித்து கண்ணனின் லீலா வினோதங்களோடு கலந்து விடுகின்றோம் .

பிறப்பு, திருமேனி, அழகு, தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சாப்பாணி, தளர்நடை, அண்மை வருகை, புறம் புல்கல், அப்பூச்சி காட்டல், கம்மம் உண்ணல், காது குத்தல், நீராட்டம் குழல் வாரல், பூச்சூட்டல், காப்பிடல் போன்ற கண்ணனின் குழந்தமைகளை மிகுந்த உணர்வு பூர்வமாக தாய்மயின் உணர்வுத் தளத்தில் நின்று பாடியுள்ளார்.

இவரிடம் வெளிப்படும் தாய்மையின் பரிவை, அன்பை, கருணையை, கண்ணனின் குறும்புகளை , பெருமைகளை இவர் பாடல்கள் எவ்வாறு புலப்படுத்துகின்றன என்பதை பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியூடாக நோக்க விழைகின்றேன்.

‘நீராட்டல்’ என்ற பகுதியில் யசோதையின் நிலையில் இருந்து கண்ணனை நீராட வருமாறு பெரியாழ்வார் அழைக்கின்றார். இதனை இதன் கடைக்காப்புச் செய்யுளில் ,

‘ கார்மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார்மலி கங்கை யசோதை மஞசனமாடிய ஆற்றை’
‘ பட்டர்பிரான்’ ஆகிய தான் பாடியதாகச் சொல்லுகின்றார்.

அவர் கண்ணனை நீராட அழைக்கும் போது பல்வேறு உத்திகளில் அழைத்தார். அதிலெல்லாம்

கண்ணனின் குறும்புகளும்
கண்ணனின் பெருமைகளும்
தாயாய் அவர் வைத்த அன்பும்

வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்.

சிறு குழந்தைகள் புழுதியில் அளைந்து உருண்டு புரண்டு விளையாடி விட்டு நிற்கும். ‘நீராட வா’ என்று கூப்பிட்டதும் ஓடும் - ஒளிக்கும், மறுக்கும் - மறுகும். ‘ஓடாதே வாராய்’ என்று அழைத்து நீராட வந்தால் நான் உனக்கு அது தருவேன் இது தருவேன் நீ அச்சாப்பிள்ளை, கெட்டிக்காரன் என்று பாராட்டி நீராட அழைக்கும் தாய்மைக்குணம் பெரியாழ்வாரில் மிக அழகாக வெளிப்படுகிறது.

இந்தப்பாடல் பகுதியில் கண்ணனின் குறும்புகளை மிக அழகாக இவர் சொல்லுகின்றார். வேண்ணெயைத் திருடி உண்ணும் கள்ளனாய், விளையாடி உடம்பெல்லாம் புழுதி ப+சியவனாய், கூடிச்செல்லும் கன்றுகளின் காதில் கட்டெறும்பை விட்டு அவற்றைக் கலைந்தோடச் செய்யும் குறும்பனாய், எண்ணெய்க் குடத்தை சரித்து உருட்டி ஊற்றுபவனாய், தூங்கும் குழந்தையைத் தட்டியெழுப்பியும் கண்ணைப் புரட்டி விழித்தும் வம்பு செய்பவனாய், பசுக்கன்றின் வாலிலே ஓலையைக் கட்டி விட்டவனாய் கனிகளுதிர கல்லால் எறிபவனாய் , மாட்டுத் தொழுவத்தில் கைகளால் அளைபவனாய் கண்ணனின் குறும்பு வடிவங்கள் நீள்கின்றன.

ஒரு தாயாய் கண்ணனின் குறும்புகளைப் பெரியாழ்வார் இரசிக்கிறார், விரும்புகிறார். குழந்தையின் குறும்பைக் கண்டு கொடுப்புக்குள் சிரித்து இரசிக்கும் தாயின் மனதை பெரியாழ்வாரிடம் மிக அழகாகக் காண்கின்றேன். ஆனால் ஊரார் பழி சொல்லுவார்களே என்று அஞ்சுகிறார். இதனை,

‘ப+ணித் தொழுவினில் புக்குப் புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்’
என்று தன் உணர்வை வெளிப்படுத்துகின்றார்.

தன் பிள்ளை என்ன தவறு செய்தாலும் ஒத்துக்கொள்ளாத சராசரித் தாயின் மனநிலையை உள்ளக்கிடக்கையை தாய்மை ப+ரித்துக் கிடந்த பெரியாழ்வரிடம் காண்கின்றோம். வீட்டிலே வெண்ணெயானது கண்ணன் பிறந்த நாள் முதல் இல்லாமல் போவதையும் அதைக் கண்ணன் உண்பதையும் தெளிவாகத் தெரிந்த போதும் நற்றாயான தேவகிக்காகவும் அவன் மீது கொண்ட அன்புக்காகவும் மறந்தும் அதை யாருடனும் கதைக்கமாட்டேன் என்கின்றார்.

கறந்த நற்பாலும் தயிரும் கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்

கண்ணா நீ குளிக்காமல் இருக்கப்போகிறேன் என்று விரும்பினால் அந்தக் குறும்பும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நீ குளிக்கவில்லையென்றால்,

‘ செப்பிள மென்முலையார்கள் சிறுபுறம்பேசிச் சிரிப்பர்
நப்பின்னை காணிற் சிரிக்கும்’ என்பதைச் சொல்லுகின்றார்.
மேலும்’ கண்ணன் குளிக்கவேண்டும் என்பதற்காக கண்ணனின் பெருமைகளை ஞாபகப்படுத்துகின்றார். பிள்ளைகளை ‘ அச்சாப்பி;ள்ளை , என்ரை குஞ்சல்லே, என்ரை கண்ணல்லே, முத்தல்லே என்றெல்லாம் பெருமை சொல்லிக் கொஞ்சிப ;ப+ரிக்கும் தாய்மையைப் பெரியாழ்வாரில் காண்கிறோம். ஆழ்வார், ‘ நண்ணல் அரிய பிரானே , நாரணனே , அழகனே, நம்பீ, மாணிக்கமே என் மணியே என்று கண்ணனின் நாமகரணங்களைச் சொல்லி செல்லமும் கொஞ்சுகிறார்.

நின்ற மராமரம் சாய்த்தாய் என்றும்

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய்முலை வைத்த பிரானே

என்று சகடாசுரனை வதைபுரிந்த திறத்தையும்,, பால் கொடுத்து கண்ணனின் உயிரை எடுக்க நினைத்த ப+தனை அரக்கியின் முலையில் பாலைக் குடித்தே அவளின் உயிரை எடுத்ததையும் பாம்பு வடிவில் வந்த அகாசுரனைத் துன்புறுத்தியது என்றும் நீளும் அவனின் வீரப்பெருமையையும் ஆழ்வார் பேசுகின்றார்.

ஒலிகடல் ஓத நீர் போல் வண்ணம் அழகிய நம்பீ என்று அவன் அழகில் மயங்குகிறார்.
நீ குளிக்க வந்தால் உனக்கு அது தருவேன் இது தருவேன் என்று ஆசையூட்டும் தாய்மையை ஆழ்வாரில் காண்கிறோம். கண்ணா உன்னை நீராட்டுவதற்காக எண்ணைய்,சிகைக்காய், காய்ச்சின நீரோடு நெல்லிக்காயை கடாரத்தில் நிரப்பியும், மஞசள், செங்கழுநீரின் வாசிகை, நாறு நாந்து, அஞசனம் சகிதம் காத்திருப்பதைச் சொல்லுகின்றார்.
மேலும் நீ குளித்த பிறகு – புசிப்பதற்கு
‘அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்’ என்று ஆசையூட்டுகிறார். ‘ உண்ணக் கனிகள் தருவேன்’ என்று விருப்பூட்டுகிறார்.

நீ குளிக்க வராவிட்டால் உன்னை என்னுடன் சேர்ந்து படுக்கவும் விடமாட்டேன் என்று கண்டிப்பும் உள்ளே கரந்து நிற்கும் அன்பும் சேர வெருட்டுகிறார்.

இவ்வாறாக பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியிலே கண்ணனின் குறும்புகள், பெருமைகள், யசோதையாகவே மாறிவிட்ட பெரியாழ்வாரின் தாய்மை என்பன ஒன்று சேர்ந்த ஒரு கவித்துவத்தை அனுபவிக்கமுடிகின்றது.

பாடத்திட்டத்தில் நவீன கவிதை:

---த.அஜந்தகுமார்கவிதை என்றால் என்னவென்று ஒருவர் எம்மைக் கேட்டால் அதற்கு முடிந்த முடிவான வரையறையை எம்மால் சொல்லிவிட முடியாது. கலைகள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். அதேபோல் அதன் வடிவத்தின் பண்புகள் பற்றிக்கூட முடிந்த முடிவாக கூறிவிட முடியாது. மரபுக்கவிதை என்று நாம் இப்போது கூறும் கவிதைக்கு சில விதிகள்இ சட்டகங்கள் இருக்கின்றன. ஆனால் அது கூறுகின்ற பொருள் இதுதான் என்று காலசூழல் வர்த்தகமானங்களின் ஓட்டத்துக்கு ஏற்ப முடிந்த முடிவாகக் கூறிவிட முடியாது என்றே இன்றைய ஆய்வுலகில் தோன்றுகின்றது. பழந்தமிழ்க் கவிதைகள் தொடர்பாக சில உரையாசிரியர்களிடம் பாடபேதங்கள்இ பொருட்பேதங்கள் இருக்கவே செய்தன. ஆனால் இன்றைய பொருள்கொள்ளல்களில் கருத்தியல்கள் பாரிய செல்வாக்குப் பெறுகின்றன. இரசனை சார்ந்த ஆய்வு மட்டம் வேறாகவும் கருத்தியல் சார்ந்த ஆய்வுமட்டம் வேறாகவும் கிளைபிரிவது தவிர்க்க முடியாதது. எடுத்துக்காட்டாக ஒரு சங்கக் கவிதைக்கு தனியே இரசனை சார்ந்தவன் ஒருவன் பார்ப்பதற்கும் பின்நவீனத்துவம் சார்ந்தவன் பார்ப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

சங்க இலக்கியம் மறுவாசிப்பின் தேவை என்ற கட்டுரையில் க.பூரணச்சந்திரன் ;யாதும் ஊரே’இ’யாயும் ஞாயும்’ என்று நாம் இலகுவாய் அறிந்த சங்கப்பாடல்களைக் கட்டுடைப்புச் செய்து அவற்றின் மறுவாசிப்பின் தேவையை வலியுறுத்தியுள்ளார். ஒரு தொகைப் பாடல்கள் உள்ள சங்கக் கவிதை போன்றவற்றுக்கு ஒரு பொருள் அல்ல பல பொருள் கொள்ளும் நிலைக்கு ஆய்வுலகு வளர்ந்துவிட்ட சூழலில் “நவீன கவிதை” இன்னும் பல சிக்கல்களுக்கு ஆட்படும் அவலம் மேலெழுந்துள்ளது.

கவிதையில் மரபு-புதிசு-நவீனம் என்று பிரிப்பது சரியா தவறா என்று கூட விவாதிக்கப்படுகின்றது. அது கவிதையாக இருக்கிறதா? இல்லையா? என்பதே கேள்வி என்கின்றார்கள். அது சரியென்ற போதிலும் விதிகள் - வரையறைகளுக்கு ஆட்படாது மேலெழுந்த இந்த நவீன கவிதைகளுக்கு என்று ஒரு முக்கியம் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.

பெரும்பாலும் நவீன கவிதை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமானது புரியவில்லை – விளங்கவில்லை - இருண்மையாக உள்ளது என்பதுதான். ஏன் புரியவில்லை எது புரியவில்லை என்ற கேள்வியை நாம் இத்தோடு சேர்த்து எழுப்புவது மிக அவசியமானது. நாயக்கர் காலத்திற்கும் நவீன காலத்திற்கும் சிலர் முடிச்சுப்போடுகின்றார்கள். வித்துவச் செருக்கும் புரியாமை என்பதுமே அதற்குக் கற்பிக்கும் காரணங்கள்……

நாயக்கர் காலத்திலே “மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவாரோ….” என்று பாடியதைப் போல் இன்றைய நவீன கவிஞர்களும் - தொடர் வாசிப்பு – தீவிர வாசிப்பு – நவீன கவிதைகளுடனான பரிச்சயம் இல்லாதர்கள,; கவிதை விளங்கவில்லை ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தலையில் அடித்துக்கொள்வதால் என்ன இலாபம் என்று மல்லுக்கட்டுகின்றார்கள். இந்த நேரத்தில் கவிதையின் இயல்பான ஊற்றையும சில கவிதை உற்பத்திச்சாலைகளையும் வேறுபடுத்திக் கண்டு கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு வாசகனிடம் உண்டு. சிலர் புரியாததாகவே எழுதுவதை நவீன – பின் நவீன கவிதை என்றும் கற்பிதம் செய்து கொள்ளும் போது பல அபத்தங்கள் நேர்ந்துவிடுகின்றன. இந்தக் கொடுப்பினை தமிழ் இலக்கியத் தாய்க்கு தவிர்க்க முடியாததாக கிடைத்தபடியே இருக்கிறது. இயல்புக்கும் உற்பத்திக்கும் ஈடுகொடுத்தபடிதான் நவீன கவிதை பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது.

இந்த இடர்பாடுகள்இ சிக்கல்கள்இ நவீன கவிதைக்கு இருக்கும் சூழலில் பாடத்திட்டத்தில் இக் கவிதை இடம்பெறும் போது பல குழப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. தரம் 11 புதிய பாடத்திட்டத்தில் பல நவீன கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பல ஆசிரியர்கள் அக்கவிதைகள் என்ன கூறுகின்றன என்று கண்டுபிடிக்க முடியாது. தலையை உடைத்து சில இலக்கியவாதிகளை அணுகுவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வகையில் மாணவர்களை விட ஆசிரியர்களை அது “திணறடிக்க”அல்லது “தேடலுக்கு” ஆட்படுத்த கருவியாக அமைந்தும் இருந்திருக்கின்றது. அக்கவிதைகள் சிலவற்றுக்கு பாடப்புத்தகத்தில் நல்ல கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் “நவீன கவிதைக்கு” கேட்கக் கூடாதஇ இக்கவிதை என்ன கூறுகிறது? என்ற முடிந்த முடிவான வினாக்களைக் கேட்டும் இருக்கின்றது. இக்கேள்விக்கு எல்லா மாணவர்களும் ஒரே பதிலை எழுத வேண்டும் என்றும் இல்லை ஆசிரியரும் முடிந்த முடிவான பதிலைக் கொடுக்கக்கூடாது.

இந்நிலையில் எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் என்னை அணுகி தரம் 11 தமிழ் பாடத்திட்டத்தில் உள்ள மாதுமையின் “எனது புத்தகம்” என்ற கவிதையை வாசிக்கச் சொல்லிவிட்டு இந்தக் கவிதை என்ன சொல்லுகின்றது என்று கேட்டான். மிக அமைதியாக இரண்டு மூன்று தடவை கவிதையை வாசித்துவிட்டு வாழ்க்கையை பற்றி குறியீடாகவும் படிமமாகவும் சில விடயங்களை இக்கவிதை கூறுகிறது என கொள்ளலாம் என்றேன்.

அவன் உடனேஇஇல்லையே ரீச்சர் சொன்னவர் “இது விபச்சாரி ஒருத்தியைப் பற்றித்தான் கூறுகின்றது என்று” நான் மிக ஆறுதலாக அவன் பதிலைக் கிரகித்து விட்டு சரியெடாப்பா அப்படியும் கொள்ளலாம் என்று அவனுக்கு விடை கொடுத்தேன். பல பாடசாலை மாணவர்களை விசாரித்தபோதும் (விபச்சாரி பற்றியது என்றே படிப்பித்தார்கள்.என்றார்கள். எனக்கும் அந்த “பொதுமை” ஆச்சரியம் தந்தது ஏதும் “செமினார்” நடந்ததோ என்று என் நண்பரான ஆசிரியரை விசாரித்தேன். அவர் இல்லை என்றார். என்றாலும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை அப்படி கூடிக் கதைத்ததோ எப்படியோ ஒரு பொதுமைக்குள் வரவேண்டியது அவசியமானதுதான் என்று நான் மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன். எனினும் அவர்கள் கற்பிக்கும் போது முடிந்த முடிவான பொருள் இதற்கு இல்லை இப்படியும் கொள்ளலாம் என்று அவர்களின் சின்ன மூளைக்கு (?) புகட்ட வேண்டியது மிக மிக அவசியமானது என்பதை மறுக்க முடியாது. நவீன கவிதை ஒன்றுக்கு இதுதான் பொருள் என்று யாரும் கூற முடியாது (நவீன கவிதைக்கு மட்டுமல்ல) அது பிரதி. அதற்கு வௌ;வேறுபட்ட பொருள்களை நாம் கொள்ள முடியும். ஏன் படைப்பாளி நினைத்தது வேறாக இருக்கும்;. அது குற்றம் அல்ல. அது இலக்கிய அறம். ஒரு படைப்பாளி ஒரு படைப்பை எழுதியதும் அவன் வேலை முடிவடைந்து விடுகின்றது. வாசகர்தான் அதற்குப் பிறகு எல்லாமே. நாம் இதைத்தான் எழுதினேன். உதை அல்ல என்று கூறவும் முடியாது கூறிக் கொண்டிருக்கவும் முடியாது. அதனால்தான் “படைப்பாளிஇ இறந்துவிட்டான்இ படைப்பு இருக்கிறது” என்று சொல்கின்றார்கள்.

நவீன கவிதை என்ற பெயரில் வரும் உற்பத்திகளை விலக்கி நல்லவற்றை இனங்காணும். வாசகப் பிரக்ஞை – அவற்றோடு ஊடாடும் வாசக மனம் நமக்கு வாய்க்க வேண்டுமாக இருந்தால் மனத்தடைகளை விலக்கி எல்லையற்ற வாசகராய் எம்மை விரித்துஇ சொற்களுக்கு அப்பால் விரிந்து செல்லும் கவிதை வெளிக்குள் நாம் சஞ்சரிக்க வேண்டும் அந்தப் பக்குவம் எளிமையாக வாய்த்துவிடாதுஇ அதற்கான ஒரே தகுதிஇ நல்ல வாசகன் என்பதுதான்.

மகாகவி பாரதியாரும் கவிதைச் சிந்தனைகளும்
---த.அஜந்தகுமார்

பாரதி தமிழுக்கும் தமிழ்க்கவிதைக்கும் கிடைத்த ஒரு கொடை. 1882 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதி பாரதி பிறந்தான். “பாரதி” என்ற பெயர் தமிழ்க்கவிதை மரபில் ஒரு மந்திரம். அவனை உச்சரிக்காமல் நாம் தமிழ்க்கவிதையை நினைத்துவிடமுடியாது. தான் வாழ்ந்த சமூக –தேசிய சூழலுடன் தன்னைப் பிணைத்தும் உள்ளீர்த்தபடியும் தன்னைத் தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தியவன் பாரதி. இலக்கியப் படைப்பாளியாக, பத்திரிகையாளனாக, சமுதாயசிந்தனையாளனாக , நாட்டுவிடுதலைப் போராளியாகப் பல நிலைகளில் இவன் செயற்பட்டவன். பேராசிரியர் கா.சிவத்தம்பி,

“மகாகவி என்பவன் கடந்த காலம் பற்றிய விளக்கத் தெளிவும் நிகழ்காலம் பற்றிய ஆய்வறிவும் எதிர்காலம் பற்றிய கற்பனாதரிசனம் உடையவனாகவும் விளங்குவான்…..அதாவது இலக்கியப்பாரம்பரியத்தின் திசை திருப்பியாக மகாகவி இருப்பான்”

என்று கூறியது போலவே பாரதி மகாகவியாக பாரதி இலங்கினான் -இயங்கினான். தன் ‘மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி’ கவி பாடிய வல்லவன் இவன். அவனின் பிறந்த நாளான இன்று அவனின் கவிதைச் சிந்தனைகளை ஒரு முறை மீட்டிப் பார்ப்பதே சுகம் தரும் ஒரு அனுபவம்தான்.

;ஆடுதல் பாடுதல் கவி ஆதினைய கலைகளில்
ஈடுபட்டென்றும் இருப்பவர் - பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்;;’

என்று பாடிய பாரதி தேசத்துக்காய் - சுதந்திரத்துக்காய் -சமூகவிடுதலைக்காய் பாடினான்,பாடுபட்டான். இதனாலேயே,

‘ வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்று பதவி கொள்வார்’
என்று நம்பினான்.- பாடினான். இதனாலேயே தன்னை ‘இருங்கலைப் புலவனாக்குதி’ பாஞ்சாலி சபதத்தில் பராசக்தியிடம் அவன் வேண்டினான். ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’ என்று வெறுமனே அவன் பாடிவிடவில்லை.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்

என்ற தெளிவுடையவனாகவும் உறுதியுடையவனாகவும் இருந்தான். அதே நேரத்தில் தனக்கு முன்னிருந்த கவிமரபை ஆய்ந்து அறிந்த மேதையாக இருந்தான்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
ப+மிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று இவன் பாடியதில் கவிமனத்தையும,; ஆய்வுமனத்தையும் காண்கின்றோம். இன்னும் மேலும் ,
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’
என்று அவாவி நின்றான். பாடினான், சாதித்தான்.


தான் கவிதை பாடவேண்டிய தேவையை தெய்வம் தன்னை இன்ன இன்ன காரணங்களுக்காக கவிபாடச் சொன்னது என்று பின்வருமாறு பாடுகிறான்.

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டெனும் ஓர் தெய்வம்:
பண்ணிலின்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டியெங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே

இதில் இவன் கவிதைச் சிந்தனைகள் சமூகத்தையே சுற்றிச் சுற்றி நிற்பதைக் காணலாம். ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்பதே இவன் கனவாக இருந்தது.

‘புதியன விரும்பு’ என்று புதிய ஆத்திசூடி சொன்ன பாரதி, ‘மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமடா’ என்று சொன்ன பாரதி,

‘சுவை புதிது பொருள் புதிது
வளம் புதிது சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை எந்நாளும்
அழியாத மகாகவிதை’ களைப் பாடினான். இதனாலேயே துணிந்து,

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையென்னும்
வசையென்னாற் கழிந்த தன்றே

என்று பெருமிதத்துடன் பாடமுடிந்தது.

‘தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்’ பாரதியின் திண்ணமான எண்ணமாக இருந்தது. இதனை பாஞ்சாலி சபத முகவுரையில்,

‘ எளிய பதங்கள் எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருசத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்திற்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்’

என்று கூறுவதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்..

பாரதி பாடிய தேசியப்பாடல்களும் பக்திப்பாடல்களும் வேதாந்தப் பாடல்களும் முப்பெரும் பாடல்களும் தனிப்பாடல்களும் வசனகவிதைகளும் அவன் ஆளுமையின் விகசிப்புகளாய் இன்றும் நின்று நிலைக்கின்றன.

“ தேவாரத்திலும் திருவாசகத்திலும் திருவாய்மொழியிலும் திருக்குறளிலும் கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்கு தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை “

என்று பாரதி தன்னுடைய கட்டுரை ஒன்றிலே எழுதினான். அதே போல பாரதியைப் படிக்காதவர்கள் தமிழனாகவோ தமிழபிமானியாகவோ இருக்கமுடியாது, இருப்பதில் அர்த்தமும் இல்லை.


நன்றி : உதயன் - வலம்புரி dec.2009