இலக்கியமும் பாலியலும் ஒரு தொடர் சிந்தனைக்கான முன்னுரை




த.அஜந்தகுமார்

இலக்கியம் என்ற துறை தனியே கலை வெளிப்பாடாக மாத்திரம் குறுகிவிடுகின்ற ஒன்று அல்ல. அது பல்வேறு சமூகத்துறைகளுடனும் ஊடாட்டம் கொள்ளுகின்ற துறையாகும். இலக்கியம் பல்வேறு கோட்பாடுகளுடனும் துறைகளுடனும் ஓயாது ஊடாடுவது. அதனால்தான் இலக்கியம் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத கூறாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்தக்கட்டுரை இலக்கியத்துக்கும் பாலிய லுக்குமான தொடர்பையும் அதன் வெளிப்பாட்டின் பலம், பலவீனம் என்பவற்றுக்கான ஒரு சில புள்ளிகளை இனங்காட்டுவதாகவும் ஒரு தொடர் முயற்சிக்கான முன் ஆரம்பமாகவும் விளங்கு கின்றது.
‘ஒடுக்கப்பட்ட பாலியலின் வெளிப்பாடுதான் இலக்கியம்’ என்று ப்ராய்ட் கூறினார். சங்க இலக்கி யங்களில் இருந்து இன்றைய பின்நவீன இலக்கி யங்கள் வரை பாலியல் என்பது இலக்கியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இதனை ஜெயமோகன்,
‘‘எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை வேதங்களில், பைபிளில்... இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தில் இரு சிகரங்களாகச் சொல்ல வேண்டும்... மனிதர்களுக்கு பாலுணர்வென்பது மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிப்படையான இச்சை. இச்சைகள் அனைத்துமே ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனை யைப் பாலுறவு சார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர் வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது’’ என்று மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
இலக்கியத்தில் பாலியலை எழுதுதல் என்பது சிலரைப் பொறுத்தவரை அருவெருக்கத்தக்க ஒன்றாகவும் சிலரைப் பொறுத்தவரை கொண்டாடத் தகுந்த ஒன்றாகவும், சிலர் தேவைப்படும் இடத்தில் அதன் பிரயோகத்தை புரிந்தவராகவும் இருப்பதைக் காணலாம். சிலர் பாலியல் என்பதைத் தமது கோட்பாடுகளுக்கான அரசியலாகவும், பிரபல்யத்துக் கான அரசியலாகவும் பயன்படுத்து வதும் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது.
1. பாலியல் அனுபவங்களை இயல்பாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தல்
2. பிரபல்யத்துக்கான ஒரு உபாயம்
3. கோட்பாடுகளுக்கான ஒரு வழிமுறை அரசியல் சாதியம் பின்நவீனம் பெண்ணியம் இப்படி...
4. சமூக வக்கிரங்களை வெளிப்படுத்தல்
5. இன ஒடுக்குமுறையை வெளிப்படுத்தல்
என்று பல தளங்களில் பாலியல் இலக்கியத்தில் கையாளப்படலாம்.
ஈழத்தில் எஸ்.பொவின் ‘தீ’யில் இருந்து இன்று உமாவரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ வரை பாலியல் அனுபவங்கள் மிக நேரடியான முறையில் இலக்கியத்தில் பயில்வதை நாம் காணலாம். தெணியானின் ‘காத்திருப்பு’ நாவல் பாலியல் உறுப்புகள் எதையும் சுட்டாது அதன் வக்கிரத்தின் வாடையின்றி ‘கத்தியில்’ பிரயாணம் செய்கிறது. டானியலின் நாவல்கள் தெணியானின் படைப்புகள் சிலவற்றில் சாதியப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு அரசியலாக பாலியல் பயில்கிறது. இன்றைய பெண்ணியப் படைப்புகளில் பாலியல் திருப்தியீனங்கள், பாலியல் வக்கிரங்கள் நேரடியாக முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல் முக்கிய இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் பின்நவீனத்து வம் என்பதே பாலியல் வழியாக எல்லைகளைக் கடத்தல் என்ற ‘பார்வை’ ஆழமாக ஊன்றி பாலியல் உறுப்புகளாலும் கதைகளாலும் இலக்கியப் படைப்புகள் நிறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டார் கதைகளில் உள்ள பாலியல் கதைகளைத் தெரிந்தும் தொகுதிகள் வந்து கொண்டிருக்கின்றன.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாலியலும் இலக்கியமும் ஒவ்வாமைத் துறைகள் அல்ல. ஆனால் பாலியல் என்பது வெறும் மலினமான ஒன்றாக மூன்றாம்தர எழுத்தோடு எழுதப்பட்டு பின்நவீனத்துவ லேபிள் பெறும் போதே பிரச்சினை வருகிறது.
பாலியல் உறுப்புகள் வந்து விட்டால் இலக்கியத்தில் அது ஒரு பாவம் இல்லைத்தான். தேவையானபோது நாம் அதை எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூசத் தேவையில்லை. அத்தோடு சில படைப்புகளில் வரும் பாலியல் உறுப்புகள் அதன் அர்த்தத்தை கடந்து விடுகின்றன.
நற்றிணையில் ‘ஒரு முலை திருகிய திருமாவுன்னி என்று வரும் போது அங்கு திருமாவுன்னியின் ஆணுக்கு எதிரான ஆவேசமான போக்கையே நாம் காண்கின்றோம். கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் வருகின்ற ‘யோனி’ தனியே உறுப்பு அல்ல. இன ரீதியாக ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குமுறல் - ஆவேசம், மனுஷ்ய புத்திரனின் குருடனின் சுயமை துனத்தை ஒட்டிப்பார்க்கும் சோடிக்கண்களைப் பற்றிப் பேசும் கவிதையில் பிரதானப்படுவது சுயமைதுனம் அல்ல - சமூகவக்கிரத்தின் மீதான விமர்சனம்தான்.
எனவே பாலியல் உறுப்புகள் எழுதுவது பாவகாரியம் அல்ல. தேவையான இடங்களில் கருத்துப் புலப்பாட்டுக்கான ஆழமான வடிவமாக இது விளங்குவதையும் காணலாம். அதே நேரத்தில் வெறும் பாலியல் உணர்வை கிசுகிசு உணர்வுடன் எழுதிவிட்டு இதற்குள் ‘ஆயிரம் அர்த்தங்கள்’ உண்டு என்று கதையளக்கும் போதுதான் கோபம் வருகிறது.
தமிழகத்தில் சாருநிவேதிதா, ஸ_ரோடிகிரி, ராஸலீலா என்று பல நாhவல்களில் பாலியலை மிகவெளிப்படையாக எழுதி வருவதைக் காண் கின்றோம். அவற்றின் சமூகப்பயன் என்ன என்கின்ற போது பெரும் கேள்விகள் எழுந்துவிடுகின்றன.
ஈழத்தில் அண்மைக்காலமாக இராகவனின் எழுத்துகள் பாலியலை எந்த கூச்சமும் இல்லாமல் மிக வெளிப்படையாக எழுதிச் செல்கின்றன. அவை தனியே பாலியல் நெருக்கீடுகள் அனுபவங்கள் என்ப வற்றைத் தாண்டி சில சமூக தேச ஒடுக்க நிலை களைப் பேசுவவையாக இருந்தாலும் அதில் துருத்திக் கொண்டு நிற்பது பாலியலே. அவரின் சிறுகதைகள் தனி ஆய்வுக்கு உரியன. எஸ்.பொ வின் ‘காலம்’ இதழ் சிறப்பு மலரில் எஸ்.பொ வின் ‘பால்வீதி’ யில் ஊடாக தானும் பயணித்து பாலியல் ஊடாக பல ஒடுக்கு முறைகளை எழுதவேண்டும் என்று இராகவன் வாக்குமூலம் தந்ததும் ஞாபகம் வருகின்றது.
இலக்கியத்தில் பாலியல் என்பது இன்று நேற்று கையாளப்படத் தொடங்கிய விடயமல்ல அது அழகியல் உணர்வுடன் சங்க இலக்கியங்களிலேயே தொடங்கிவிட்டன. இன்று வரைக்கும் இப்பண்பு தன்னியல்பாகவும், அரசியலாகவும், மூன்றாந்தர எழுத்தாகவும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றது.
‘தமிழ் இலக்கியங்களில் பாலியல்’ என்ற தலைப்பில் எழுதும் போது அது நீண்டதாகிவிடலாம் எனவே அடுத்து வரும் இதழ்களில் ஈழத்த நாவல்கள் சிறுகதைகள், கவிதைகளில் பாலியல் எவ்வாறு பயின்று வருகின்றது என்பதை எனக்கு எட்டிய படைப்புகளைக் கொண்டு ஆராய உள்ளேன் அவை எமது படைப்புச் செயற்பாட்டில் சில விவாதங்களையும் ஆரோக்கியங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.’

1 கருத்துரைகள்:

ந.மயூரரூபன் said...

வாழ்த்துக்கள்!
அருமையான ஆரம்பம்.
இன்றைய படைப்புச்சூழலில் அவசியம் பார்க்கப்படவேண்டிய பக்கம் இது.

Post a Comment