‘பெரியாழ்வாருக்குள் ஊற்றெடுக்கும் தாய்மை’
--- த.அஜந்தகுமார்

சங்கமருவிய காலத்தில் காரைக்காலம்மையார், முதல்மூன்று ஆழ்வார்கள் மூலம் ஊற்றெடுத்த பக்தி இலக்கியம் பல்லவர்காலத்தில் பெரும் உணர்வுத்தளமாக மாற்றம் கண்டது. உணர்வு வெளிப்பாட்டில் சைவ பக்தி இலக்கியங்களை விட வைணவ பாசுரங்கள் ஆழமானவை. அழகியலும் உணர்ச்சிச் செறிவும் கொண்டவை. ஆண்டாளின் கவித்துவமும் அவளின் உணர்ச்சி உணர்வுத்தளமும் உருக வைப்பவை. பெண்ணுடலினதும் மனத்தினதும் அழகியல் வெளிப்பாடல்கள் அவளது பாடல்கள்.

ஆண்டாளது தந்தைதான் பெரியாழ்வார். பெரியாழ்வார் பெருமாலுக்கு பூமாலை சாற்றும் தொண்டர். பாமாலை சூட்டிய பாவலர். மன்னனால் பட்டர் பிரான் என்று சிறப்பிக்கப்பட்டவர் இவர் இயற்றிய பிரபந்தங்கள் திருப்பல்லாண்டு( 11 பாசுரங்கள்) பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) இந்த இரண்டு நூல்களும் நாலாயிர திவ்விய பிரபங்தங்களின் தொடங்கங்களாக அமைந்து விளங்குவது இவற்றினதும் பெரியாழ்வாரினதும் சிறப்பை வெளிப்படுத்துவன.

இந்தப்பாடல்களில் எல்லாம் கிருஷ்ணன் லீலைகளை பல்வேறு “பாவ” நிலைகளில் பெரியாழ்வார் அனுபவித்துள்ளார்.

யசோதையாகவும், கண்ணன் மீது முறையிட்ட ஆய்ச்சியர் நிலையாகவும், கண்ணன் மீது காமுற்ற கன்னியர் நிலையாகவும், அக்கன்னியர் பற்றி இரங்கும் தாயாரின் நிலையாகவும் அனுபவித்துப் பாடியுள்ளார். யசோதை நிலையில் அவர் பாடிய பாடல்களே அதிகம்.

பெரியாழ்வார் திருமொழி கண்ணனின் அவதாரச்சிறப்புடன் தொடங்குகிறது. முதால் 25 திருமொழிகளில் கண்ணனது குழந்தைக் குணங்களோடும் பருவக் குறும்புகளோடும் தாயாக்க கலந்து நிற்கும் பெரியாழ்வார் தாய்க்குரிய அன்பை, கருணையை, இரக்கத்தை, கண்டிப்பை மிக ஆழமான உணர்வுத்தளத்தில் தாயாகவே மாறிப் பேசுகின்றார். அவரில் இருந்து சுரக்கும் தாய்மையின் குணத்தை நாமும் அனுபவித்து கண்ணனின் லீலா வினோதங்களோடு கலந்து விடுகின்றோம் .

பிறப்பு, திருமேனி, அழகு, தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சாப்பாணி, தளர்நடை, அண்மை வருகை, புறம் புல்கல், அப்பூச்சி காட்டல், கம்மம் உண்ணல், காது குத்தல், நீராட்டம் குழல் வாரல், பூச்சூட்டல், காப்பிடல் போன்ற கண்ணனின் குழந்தமைகளை மிகுந்த உணர்வு பூர்வமாக தாய்மயின் உணர்வுத் தளத்தில் நின்று பாடியுள்ளார்.

இவரிடம் வெளிப்படும் தாய்மையின் பரிவை, அன்பை, கருணையை, கண்ணனின் குறும்புகளை , பெருமைகளை இவர் பாடல்கள் எவ்வாறு புலப்படுத்துகின்றன என்பதை பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியூடாக நோக்க விழைகின்றேன்.

‘நீராட்டல்’ என்ற பகுதியில் யசோதையின் நிலையில் இருந்து கண்ணனை நீராட வருமாறு பெரியாழ்வார் அழைக்கின்றார். இதனை இதன் கடைக்காப்புச் செய்யுளில் ,

‘ கார்மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார்மலி கங்கை யசோதை மஞசனமாடிய ஆற்றை’
‘ பட்டர்பிரான்’ ஆகிய தான் பாடியதாகச் சொல்லுகின்றார்.

அவர் கண்ணனை நீராட அழைக்கும் போது பல்வேறு உத்திகளில் அழைத்தார். அதிலெல்லாம்

கண்ணனின் குறும்புகளும்
கண்ணனின் பெருமைகளும்
தாயாய் அவர் வைத்த அன்பும்

வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்.

சிறு குழந்தைகள் புழுதியில் அளைந்து உருண்டு புரண்டு விளையாடி விட்டு நிற்கும். ‘நீராட வா’ என்று கூப்பிட்டதும் ஓடும் - ஒளிக்கும், மறுக்கும் - மறுகும். ‘ஓடாதே வாராய்’ என்று அழைத்து நீராட வந்தால் நான் உனக்கு அது தருவேன் இது தருவேன் நீ அச்சாப்பிள்ளை, கெட்டிக்காரன் என்று பாராட்டி நீராட அழைக்கும் தாய்மைக்குணம் பெரியாழ்வாரில் மிக அழகாக வெளிப்படுகிறது.

இந்தப்பாடல் பகுதியில் கண்ணனின் குறும்புகளை மிக அழகாக இவர் சொல்லுகின்றார். வேண்ணெயைத் திருடி உண்ணும் கள்ளனாய், விளையாடி உடம்பெல்லாம் புழுதி ப+சியவனாய், கூடிச்செல்லும் கன்றுகளின் காதில் கட்டெறும்பை விட்டு அவற்றைக் கலைந்தோடச் செய்யும் குறும்பனாய், எண்ணெய்க் குடத்தை சரித்து உருட்டி ஊற்றுபவனாய், தூங்கும் குழந்தையைத் தட்டியெழுப்பியும் கண்ணைப் புரட்டி விழித்தும் வம்பு செய்பவனாய், பசுக்கன்றின் வாலிலே ஓலையைக் கட்டி விட்டவனாய் கனிகளுதிர கல்லால் எறிபவனாய் , மாட்டுத் தொழுவத்தில் கைகளால் அளைபவனாய் கண்ணனின் குறும்பு வடிவங்கள் நீள்கின்றன.

ஒரு தாயாய் கண்ணனின் குறும்புகளைப் பெரியாழ்வார் இரசிக்கிறார், விரும்புகிறார். குழந்தையின் குறும்பைக் கண்டு கொடுப்புக்குள் சிரித்து இரசிக்கும் தாயின் மனதை பெரியாழ்வாரிடம் மிக அழகாகக் காண்கின்றேன். ஆனால் ஊரார் பழி சொல்லுவார்களே என்று அஞ்சுகிறார். இதனை,

‘ப+ணித் தொழுவினில் புக்குப் புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்’
என்று தன் உணர்வை வெளிப்படுத்துகின்றார்.

தன் பிள்ளை என்ன தவறு செய்தாலும் ஒத்துக்கொள்ளாத சராசரித் தாயின் மனநிலையை உள்ளக்கிடக்கையை தாய்மை ப+ரித்துக் கிடந்த பெரியாழ்வரிடம் காண்கின்றோம். வீட்டிலே வெண்ணெயானது கண்ணன் பிறந்த நாள் முதல் இல்லாமல் போவதையும் அதைக் கண்ணன் உண்பதையும் தெளிவாகத் தெரிந்த போதும் நற்றாயான தேவகிக்காகவும் அவன் மீது கொண்ட அன்புக்காகவும் மறந்தும் அதை யாருடனும் கதைக்கமாட்டேன் என்கின்றார்.

கறந்த நற்பாலும் தயிரும் கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்

கண்ணா நீ குளிக்காமல் இருக்கப்போகிறேன் என்று விரும்பினால் அந்தக் குறும்பும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நீ குளிக்கவில்லையென்றால்,

‘ செப்பிள மென்முலையார்கள் சிறுபுறம்பேசிச் சிரிப்பர்
நப்பின்னை காணிற் சிரிக்கும்’ என்பதைச் சொல்லுகின்றார்.
மேலும்’ கண்ணன் குளிக்கவேண்டும் என்பதற்காக கண்ணனின் பெருமைகளை ஞாபகப்படுத்துகின்றார். பிள்ளைகளை ‘ அச்சாப்பி;ள்ளை , என்ரை குஞ்சல்லே, என்ரை கண்ணல்லே, முத்தல்லே என்றெல்லாம் பெருமை சொல்லிக் கொஞ்சிப ;ப+ரிக்கும் தாய்மையைப் பெரியாழ்வாரில் காண்கிறோம். ஆழ்வார், ‘ நண்ணல் அரிய பிரானே , நாரணனே , அழகனே, நம்பீ, மாணிக்கமே என் மணியே என்று கண்ணனின் நாமகரணங்களைச் சொல்லி செல்லமும் கொஞ்சுகிறார்.

நின்ற மராமரம் சாய்த்தாய் என்றும்

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய்முலை வைத்த பிரானே

என்று சகடாசுரனை வதைபுரிந்த திறத்தையும்,, பால் கொடுத்து கண்ணனின் உயிரை எடுக்க நினைத்த ப+தனை அரக்கியின் முலையில் பாலைக் குடித்தே அவளின் உயிரை எடுத்ததையும் பாம்பு வடிவில் வந்த அகாசுரனைத் துன்புறுத்தியது என்றும் நீளும் அவனின் வீரப்பெருமையையும் ஆழ்வார் பேசுகின்றார்.

ஒலிகடல் ஓத நீர் போல் வண்ணம் அழகிய நம்பீ என்று அவன் அழகில் மயங்குகிறார்.
நீ குளிக்க வந்தால் உனக்கு அது தருவேன் இது தருவேன் என்று ஆசையூட்டும் தாய்மையை ஆழ்வாரில் காண்கிறோம். கண்ணா உன்னை நீராட்டுவதற்காக எண்ணைய்,சிகைக்காய், காய்ச்சின நீரோடு நெல்லிக்காயை கடாரத்தில் நிரப்பியும், மஞசள், செங்கழுநீரின் வாசிகை, நாறு நாந்து, அஞசனம் சகிதம் காத்திருப்பதைச் சொல்லுகின்றார்.
மேலும் நீ குளித்த பிறகு – புசிப்பதற்கு
‘அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்’ என்று ஆசையூட்டுகிறார். ‘ உண்ணக் கனிகள் தருவேன்’ என்று விருப்பூட்டுகிறார்.

நீ குளிக்க வராவிட்டால் உன்னை என்னுடன் சேர்ந்து படுக்கவும் விடமாட்டேன் என்று கண்டிப்பும் உள்ளே கரந்து நிற்கும் அன்பும் சேர வெருட்டுகிறார்.

இவ்வாறாக பெரியாழ்வார் திருமொழியின் நீராட்டல் என்ற பகுதியிலே கண்ணனின் குறும்புகள், பெருமைகள், யசோதையாகவே மாறிவிட்ட பெரியாழ்வாரின் தாய்மை என்பன ஒன்று சேர்ந்த ஒரு கவித்துவத்தை அனுபவிக்கமுடிகின்றது.

பாடத்திட்டத்தில் நவீன கவிதை:

---த.அஜந்தகுமார்கவிதை என்றால் என்னவென்று ஒருவர் எம்மைக் கேட்டால் அதற்கு முடிந்த முடிவான வரையறையை எம்மால் சொல்லிவிட முடியாது. கலைகள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். அதேபோல் அதன் வடிவத்தின் பண்புகள் பற்றிக்கூட முடிந்த முடிவாக கூறிவிட முடியாது. மரபுக்கவிதை என்று நாம் இப்போது கூறும் கவிதைக்கு சில விதிகள்இ சட்டகங்கள் இருக்கின்றன. ஆனால் அது கூறுகின்ற பொருள் இதுதான் என்று காலசூழல் வர்த்தகமானங்களின் ஓட்டத்துக்கு ஏற்ப முடிந்த முடிவாகக் கூறிவிட முடியாது என்றே இன்றைய ஆய்வுலகில் தோன்றுகின்றது. பழந்தமிழ்க் கவிதைகள் தொடர்பாக சில உரையாசிரியர்களிடம் பாடபேதங்கள்இ பொருட்பேதங்கள் இருக்கவே செய்தன. ஆனால் இன்றைய பொருள்கொள்ளல்களில் கருத்தியல்கள் பாரிய செல்வாக்குப் பெறுகின்றன. இரசனை சார்ந்த ஆய்வு மட்டம் வேறாகவும் கருத்தியல் சார்ந்த ஆய்வுமட்டம் வேறாகவும் கிளைபிரிவது தவிர்க்க முடியாதது. எடுத்துக்காட்டாக ஒரு சங்கக் கவிதைக்கு தனியே இரசனை சார்ந்தவன் ஒருவன் பார்ப்பதற்கும் பின்நவீனத்துவம் சார்ந்தவன் பார்ப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

சங்க இலக்கியம் மறுவாசிப்பின் தேவை என்ற கட்டுரையில் க.பூரணச்சந்திரன் ;யாதும் ஊரே’இ’யாயும் ஞாயும்’ என்று நாம் இலகுவாய் அறிந்த சங்கப்பாடல்களைக் கட்டுடைப்புச் செய்து அவற்றின் மறுவாசிப்பின் தேவையை வலியுறுத்தியுள்ளார். ஒரு தொகைப் பாடல்கள் உள்ள சங்கக் கவிதை போன்றவற்றுக்கு ஒரு பொருள் அல்ல பல பொருள் கொள்ளும் நிலைக்கு ஆய்வுலகு வளர்ந்துவிட்ட சூழலில் “நவீன கவிதை” இன்னும் பல சிக்கல்களுக்கு ஆட்படும் அவலம் மேலெழுந்துள்ளது.

கவிதையில் மரபு-புதிசு-நவீனம் என்று பிரிப்பது சரியா தவறா என்று கூட விவாதிக்கப்படுகின்றது. அது கவிதையாக இருக்கிறதா? இல்லையா? என்பதே கேள்வி என்கின்றார்கள். அது சரியென்ற போதிலும் விதிகள் - வரையறைகளுக்கு ஆட்படாது மேலெழுந்த இந்த நவீன கவிதைகளுக்கு என்று ஒரு முக்கியம் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.

பெரும்பாலும் நவீன கவிதை தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் பிரதானமானது புரியவில்லை – விளங்கவில்லை - இருண்மையாக உள்ளது என்பதுதான். ஏன் புரியவில்லை எது புரியவில்லை என்ற கேள்வியை நாம் இத்தோடு சேர்த்து எழுப்புவது மிக அவசியமானது. நாயக்கர் காலத்திற்கும் நவீன காலத்திற்கும் சிலர் முடிச்சுப்போடுகின்றார்கள். வித்துவச் செருக்கும் புரியாமை என்பதுமே அதற்குக் கற்பிக்கும் காரணங்கள்……

நாயக்கர் காலத்திலே “மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவாரோ….” என்று பாடியதைப் போல் இன்றைய நவீன கவிஞர்களும் - தொடர் வாசிப்பு – தீவிர வாசிப்பு – நவீன கவிதைகளுடனான பரிச்சயம் இல்லாதர்கள,; கவிதை விளங்கவில்லை ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தலையில் அடித்துக்கொள்வதால் என்ன இலாபம் என்று மல்லுக்கட்டுகின்றார்கள். இந்த நேரத்தில் கவிதையின் இயல்பான ஊற்றையும சில கவிதை உற்பத்திச்சாலைகளையும் வேறுபடுத்திக் கண்டு கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு வாசகனிடம் உண்டு. சிலர் புரியாததாகவே எழுதுவதை நவீன – பின் நவீன கவிதை என்றும் கற்பிதம் செய்து கொள்ளும் போது பல அபத்தங்கள் நேர்ந்துவிடுகின்றன. இந்தக் கொடுப்பினை தமிழ் இலக்கியத் தாய்க்கு தவிர்க்க முடியாததாக கிடைத்தபடியே இருக்கிறது. இயல்புக்கும் உற்பத்திக்கும் ஈடுகொடுத்தபடிதான் நவீன கவிதை பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது.

இந்த இடர்பாடுகள்இ சிக்கல்கள்இ நவீன கவிதைக்கு இருக்கும் சூழலில் பாடத்திட்டத்தில் இக் கவிதை இடம்பெறும் போது பல குழப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. தரம் 11 புதிய பாடத்திட்டத்தில் பல நவீன கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பல ஆசிரியர்கள் அக்கவிதைகள் என்ன கூறுகின்றன என்று கண்டுபிடிக்க முடியாது. தலையை உடைத்து சில இலக்கியவாதிகளை அணுகுவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வகையில் மாணவர்களை விட ஆசிரியர்களை அது “திணறடிக்க”அல்லது “தேடலுக்கு” ஆட்படுத்த கருவியாக அமைந்தும் இருந்திருக்கின்றது. அக்கவிதைகள் சிலவற்றுக்கு பாடப்புத்தகத்தில் நல்ல கேள்விகளும் கேட்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் “நவீன கவிதைக்கு” கேட்கக் கூடாதஇ இக்கவிதை என்ன கூறுகிறது? என்ற முடிந்த முடிவான வினாக்களைக் கேட்டும் இருக்கின்றது. இக்கேள்விக்கு எல்லா மாணவர்களும் ஒரே பதிலை எழுத வேண்டும் என்றும் இல்லை ஆசிரியரும் முடிந்த முடிவான பதிலைக் கொடுக்கக்கூடாது.

இந்நிலையில் எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் என்னை அணுகி தரம் 11 தமிழ் பாடத்திட்டத்தில் உள்ள மாதுமையின் “எனது புத்தகம்” என்ற கவிதையை வாசிக்கச் சொல்லிவிட்டு இந்தக் கவிதை என்ன சொல்லுகின்றது என்று கேட்டான். மிக அமைதியாக இரண்டு மூன்று தடவை கவிதையை வாசித்துவிட்டு வாழ்க்கையை பற்றி குறியீடாகவும் படிமமாகவும் சில விடயங்களை இக்கவிதை கூறுகிறது என கொள்ளலாம் என்றேன்.

அவன் உடனேஇஇல்லையே ரீச்சர் சொன்னவர் “இது விபச்சாரி ஒருத்தியைப் பற்றித்தான் கூறுகின்றது என்று” நான் மிக ஆறுதலாக அவன் பதிலைக் கிரகித்து விட்டு சரியெடாப்பா அப்படியும் கொள்ளலாம் என்று அவனுக்கு விடை கொடுத்தேன். பல பாடசாலை மாணவர்களை விசாரித்தபோதும் (விபச்சாரி பற்றியது என்றே படிப்பித்தார்கள்.என்றார்கள். எனக்கும் அந்த “பொதுமை” ஆச்சரியம் தந்தது ஏதும் “செமினார்” நடந்ததோ என்று என் நண்பரான ஆசிரியரை விசாரித்தேன். அவர் இல்லை என்றார். என்றாலும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை அப்படி கூடிக் கதைத்ததோ எப்படியோ ஒரு பொதுமைக்குள் வரவேண்டியது அவசியமானதுதான் என்று நான் மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன். எனினும் அவர்கள் கற்பிக்கும் போது முடிந்த முடிவான பொருள் இதற்கு இல்லை இப்படியும் கொள்ளலாம் என்று அவர்களின் சின்ன மூளைக்கு (?) புகட்ட வேண்டியது மிக மிக அவசியமானது என்பதை மறுக்க முடியாது. நவீன கவிதை ஒன்றுக்கு இதுதான் பொருள் என்று யாரும் கூற முடியாது (நவீன கவிதைக்கு மட்டுமல்ல) அது பிரதி. அதற்கு வௌ;வேறுபட்ட பொருள்களை நாம் கொள்ள முடியும். ஏன் படைப்பாளி நினைத்தது வேறாக இருக்கும்;. அது குற்றம் அல்ல. அது இலக்கிய அறம். ஒரு படைப்பாளி ஒரு படைப்பை எழுதியதும் அவன் வேலை முடிவடைந்து விடுகின்றது. வாசகர்தான் அதற்குப் பிறகு எல்லாமே. நாம் இதைத்தான் எழுதினேன். உதை அல்ல என்று கூறவும் முடியாது கூறிக் கொண்டிருக்கவும் முடியாது. அதனால்தான் “படைப்பாளிஇ இறந்துவிட்டான்இ படைப்பு இருக்கிறது” என்று சொல்கின்றார்கள்.

நவீன கவிதை என்ற பெயரில் வரும் உற்பத்திகளை விலக்கி நல்லவற்றை இனங்காணும். வாசகப் பிரக்ஞை – அவற்றோடு ஊடாடும் வாசக மனம் நமக்கு வாய்க்க வேண்டுமாக இருந்தால் மனத்தடைகளை விலக்கி எல்லையற்ற வாசகராய் எம்மை விரித்துஇ சொற்களுக்கு அப்பால் விரிந்து செல்லும் கவிதை வெளிக்குள் நாம் சஞ்சரிக்க வேண்டும் அந்தப் பக்குவம் எளிமையாக வாய்த்துவிடாதுஇ அதற்கான ஒரே தகுதிஇ நல்ல வாசகன் என்பதுதான்.

மகாகவி பாரதியாரும் கவிதைச் சிந்தனைகளும்
---த.அஜந்தகுமார்

பாரதி தமிழுக்கும் தமிழ்க்கவிதைக்கும் கிடைத்த ஒரு கொடை. 1882 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதி பாரதி பிறந்தான். “பாரதி” என்ற பெயர் தமிழ்க்கவிதை மரபில் ஒரு மந்திரம். அவனை உச்சரிக்காமல் நாம் தமிழ்க்கவிதையை நினைத்துவிடமுடியாது. தான் வாழ்ந்த சமூக –தேசிய சூழலுடன் தன்னைப் பிணைத்தும் உள்ளீர்த்தபடியும் தன்னைத் தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தியவன் பாரதி. இலக்கியப் படைப்பாளியாக, பத்திரிகையாளனாக, சமுதாயசிந்தனையாளனாக , நாட்டுவிடுதலைப் போராளியாகப் பல நிலைகளில் இவன் செயற்பட்டவன். பேராசிரியர் கா.சிவத்தம்பி,

“மகாகவி என்பவன் கடந்த காலம் பற்றிய விளக்கத் தெளிவும் நிகழ்காலம் பற்றிய ஆய்வறிவும் எதிர்காலம் பற்றிய கற்பனாதரிசனம் உடையவனாகவும் விளங்குவான்…..அதாவது இலக்கியப்பாரம்பரியத்தின் திசை திருப்பியாக மகாகவி இருப்பான்”

என்று கூறியது போலவே பாரதி மகாகவியாக பாரதி இலங்கினான் -இயங்கினான். தன் ‘மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி’ கவி பாடிய வல்லவன் இவன். அவனின் பிறந்த நாளான இன்று அவனின் கவிதைச் சிந்தனைகளை ஒரு முறை மீட்டிப் பார்ப்பதே சுகம் தரும் ஒரு அனுபவம்தான்.

;ஆடுதல் பாடுதல் கவி ஆதினைய கலைகளில்
ஈடுபட்டென்றும் இருப்பவர் - பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்;;’

என்று பாடிய பாரதி தேசத்துக்காய் - சுதந்திரத்துக்காய் -சமூகவிடுதலைக்காய் பாடினான்,பாடுபட்டான். இதனாலேயே,

‘ வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்று பதவி கொள்வார்’
என்று நம்பினான்.- பாடினான். இதனாலேயே தன்னை ‘இருங்கலைப் புலவனாக்குதி’ பாஞ்சாலி சபதத்தில் பராசக்தியிடம் அவன் வேண்டினான். ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’ என்று வெறுமனே அவன் பாடிவிடவில்லை.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்

என்ற தெளிவுடையவனாகவும் உறுதியுடையவனாகவும் இருந்தான். அதே நேரத்தில் தனக்கு முன்னிருந்த கவிமரபை ஆய்ந்து அறிந்த மேதையாக இருந்தான்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
ப+மிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று இவன் பாடியதில் கவிமனத்தையும,; ஆய்வுமனத்தையும் காண்கின்றோம். இன்னும் மேலும் ,
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’
என்று அவாவி நின்றான். பாடினான், சாதித்தான்.


தான் கவிதை பாடவேண்டிய தேவையை தெய்வம் தன்னை இன்ன இன்ன காரணங்களுக்காக கவிபாடச் சொன்னது என்று பின்வருமாறு பாடுகிறான்.

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டெனும் ஓர் தெய்வம்:
பண்ணிலின்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டியெங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே

இதில் இவன் கவிதைச் சிந்தனைகள் சமூகத்தையே சுற்றிச் சுற்றி நிற்பதைக் காணலாம். ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்பதே இவன் கனவாக இருந்தது.

‘புதியன விரும்பு’ என்று புதிய ஆத்திசூடி சொன்ன பாரதி, ‘மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமடா’ என்று சொன்ன பாரதி,

‘சுவை புதிது பொருள் புதிது
வளம் புதிது சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை எந்நாளும்
அழியாத மகாகவிதை’ களைப் பாடினான். இதனாலேயே துணிந்து,

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையென்னும்
வசையென்னாற் கழிந்த தன்றே

என்று பெருமிதத்துடன் பாடமுடிந்தது.

‘தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்’ பாரதியின் திண்ணமான எண்ணமாக இருந்தது. இதனை பாஞ்சாலி சபத முகவுரையில்,

‘ எளிய பதங்கள் எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருசத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்திற்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்’

என்று கூறுவதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்..

பாரதி பாடிய தேசியப்பாடல்களும் பக்திப்பாடல்களும் வேதாந்தப் பாடல்களும் முப்பெரும் பாடல்களும் தனிப்பாடல்களும் வசனகவிதைகளும் அவன் ஆளுமையின் விகசிப்புகளாய் இன்றும் நின்று நிலைக்கின்றன.

“ தேவாரத்திலும் திருவாசகத்திலும் திருவாய்மொழியிலும் திருக்குறளிலும் கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்கு தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை “

என்று பாரதி தன்னுடைய கட்டுரை ஒன்றிலே எழுதினான். அதே போல பாரதியைப் படிக்காதவர்கள் தமிழனாகவோ தமிழபிமானியாகவோ இருக்கமுடியாது, இருப்பதில் அர்த்தமும் இல்லை.


நன்றி : உதயன் - வலம்புரி dec.2009