ஈழத்துத் தமிழ்ப் பெண்களின் கூட்டுக் கவித்தொகைகள் ‘சொல்லாத சேதிகள்’ முதல் ‘ஒலிக்காத இளவேனில்’ வரை ஓர் ஆய்வு

த.அஜந்தகுமார்



1.முன்னுரை

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் பெண்களின் இடம் மிக முக்கியமானது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஆரம்ப காலம் தொட்டே பெண்களின் பங்களிப்பு பல்வேறு வடிவங்களிலும் இருந்து வந்தபோதிலும் 1980களுக்குப் பிறகு வந்து சேர்ந்த பெண்ணியச் சிந்தனைகள் இலக்கியப் போக்கில் புதிய மாற்றங்களையும் புதிய பாதைகளையும்; உருவாக்கின. ~~பெண்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி சமூகத்தை, கலை இலக்கியங்களை ஆண் நோக்கில் இருந்து இடம்பெயர்த்து பெண் நோக்கில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளும் அதன் வழியான பெண்மொழிகளின் உருவாக்கம் பற்றிய பிரக்ஞைகளும் இன்று பெண் எழுத்துகளில் பேசப்படும் பொருளாக முனைப்புக் கொண்டுள்ளது. அந்தவகையில் பெண் எழுத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் பல்வேறு பரிமாணங்களில் மிளிரவேண்டியுள்ளது எனக் கொள்ளலாம்||
~~பெண்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஒரு சமூகத்தில் பெண் எழுத்தின் ஆளுமை என்பது அச்சமூகத்திற்கு எதிராக மறுப்பு நடவடிக்கையாகவும் சுத்திகரிப்புச் செயலாகவும் அமைகிறது. பெண் எழுத்துப் பல்வேறு பரிணாமங்களில் தோன்றிக் கொண்டிருந்தாலும் பெண் அனுபவத்தையும் ஆணாதிக்க எதிர்ப்பையும் சமகால வாழ்வையும் பெண் தன் மொழியில் வெளிப்படுத்தியதில் கவிதைகளின் இடமே தனித்துவமானது.

~கவிதை மொழி என்பது மனத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதனாலும் கலகம் செய்வதற்கு ஏற்ற வடிவம் என்பதனாலும் மொழியைப் பற்றிய மொழியாக அமைந்துள்ளது என்பதாலும் அவளுக்குக் கிடைக்கும் எல்லையில்லாக் கற்பனை வளத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் மிக்கது என்பதாலும் அமுக்கப்பட்ட எந்தப் பெண்ணும் தனக்கான மொழியை உருவாக்கிக்கொள்ள கவிதையே சிறந்த சாதனம்|

ஈழத்தைப் பொறுத்தவரையில் பெண்களை அடையாளப்படுத்துவனவாகவும் பங்காளியாகவும் பாதிப்புற்றவளாகவும் கலகக்காரியாகவும் போரில் குதித்தவளாகவும் கவிதையிலேயே அவள் குரல் அதிகம் ஒலிக்கின்றது.

பெண்களின் கவிதைகள் இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகிவந்தாலும் சில பெண் படைப்பாளிகளின் கவிதைகள் தனித்தொகுதிகள் வெளிவந்திருந்தாலும் இந்த ஆய்வானது சொல்லாத சேதிகள் (1986) தொகுதி முதல் ஒலிக்காத இளவேனில் (2009) வரை வெளிவந்த கூட்டுக் கவிதைத் தொகுப்புகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுகின்றது. இந்தக் கூட்டுக்கவிதைத் தொகைகள் பற்றிய அறிமுகம், அவற்றின் பேசுபொருள் கிட்டத்தட்ட 25 வருடங்களை எட்டும் இந்த முயற்சியின் தடங்களும் அவற்றின் முக்கியத்துவமும், அவை கட்டியெழுப்பும் பெண் அனுபவங்கள் எட்டியிருக்கும் பெண்மொழிக்கான பிரக்ஞைகள், அந்தந்தக் காலத்தை உக்கிரத்துடனும் உண்மையுடனும் பிரதிபலிக்கும் சொல்முறை, இறுதியாக இம்முயற்சிகள் பற்றிய மதிப்பீடு என்பவற்றை இந்த ஆய்வின் வழி நிகழ்த்த விரும்புகின்றேன். ஏதோவொரு வகையில் ஈழத்தை மையமாகக்கொண்டு ஈழத்துப் பெண்களை மட்டுமே கொண்டமைந்த கவித்தொகைகள் மாத்திரமே ஆய்வின் பரப்புக்கருதியும் வசதி கருதியும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதுவரை வெளிவந்த தொகுதிகளாக,


1. சொல்லாத சேதிகள் (1986)
2. மறையாத மறுபாதி (ஐரோப்பா 1992)
3. உயிர்வெளி - பெண்களின் காதற் கவிதைகள் - கிழக்கிலங்கை(1999)
4. எழுதாத உன் கவிதை - தமிழீழப் பெண்களின் கவிதைகள் (2001)
5. இசை பிழியப்பட்ட வீணை - மலையகப் பெண்களின் கவிதைகள் (2007)
6. பெயல் மணக்கும் பொழுது - ஈழத்துப் பெண்களின் கவிதைகள் (2007)
7. ஒலிக்காத இளவேனில் (2009) (வட அமெரிக்கா)
ஆகிய கூட்டுக் கவித்தொகைகள் முக்கியமானவை.

இவை தவிர மை (2007), பறத்தல் அதன் சுதந்திரம்(2001) போன்ற கூட்டுக் கவிதைத் தொகைகள் வந்திருந்தபோதிலும் அவை தனியே ஈழத்துப் பெண்களின் கவிதைகளை மாத்திரம் கொண்டமையவில்லை.

2. கூட்டுக்கவித்தொகைகளின் நோக்கும் இலக்கும் உள்ளடக்கமும்


மேற்சுட்டிய கவித்தொகைகளின் தோற்றத்துக்கான காரணங்களைப் பார்ப்பது எமது ஆய்வுக்கு நன்மை பயக்கின்ற ஒரு விடயமாகும்.

~சொல்லாத சேதிகள்| முன்னுரையானது
~பெண்களிடையே பெண் என்ற இந்த நிலைப்பாடு தோன்றியுள்ள இக்கால வட்டத்தில் நாம் பெண்களுக்கான ஒரு கலை இலக்கிய நெறியை உருவாக்குவது முக்கிய தேவையாகும்| என்றும்,

~மறையாத மறுபாதி| முன்னுரையானது,
ஈழத்தில் இதுவரை காலமும் இருந்த, இருக்கின்ற பெண்ணடிமைக் கலாசாரத்துக்குப் பலமான அடியின் நாதமாக வந்த ~~சொல்லாத சேதிகள்|| கவிதைத் தொகுதியின் பிற்பாடு, அதன் இரண்டாவது அடி புகலிடத்தில் ஒலிப்பதை இங்கே காணலாம்.

~உயிர்வெளி| தொகுப்புரையில்,
சமகாலக் காதல்கவிதைகள் காதலின் பல்வேறு சாயைகள் பற்றிப் பேசும் அதேசமயம் காதல் பற்றிய பெண்களின் நவீன சிந்தனையோட்டத்தையும் காட்டுகின்றன. காதல் பற்றிய விவாதத்தை எழுப்புகின்றன. மனிதருக்கு இடையேயான உறவில் ஏற்படும் பல்வெறு சுழிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் காதலர்களுக்கு இடையே ஏற்படுவது இயல்பேயாகும். இத்தகைய சிக்கல்களையும் பன்முகத்தன்மைகளையும் கூட இவை எடுத்துக் காட்டுகின்றன.

~இசைபிழியப்பட்ட வீணை| முகவுரையில்
கல்வி, சுகாதாரம், வீடு, சம்பளம் என அனைத்தையும் போராடிப் பெறவேண்டிய சூழலில் பிறக்கும் இலக்கியம் தமை அடக்கும் சக்திகளுக்கெதிராக போர்க்கொடி உயர்த்துவது அவசியமாகின்றது என்றும்


‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுப்புரையில்
பெயல் மணக்கும் பொழுது தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் காட்டும் உலகம் தமிழகச் சூழலில் பெணகவிஞர்கள் வெளிப்பாடு குறித்துக் கிளம்பும் விவாதங்கள் தளத்தில் இருந்து முழுவதும் மாறுபட்டது. பல பெண்களது அகவழிப்பயணம், வாக்குமூலங்கள், கண்டங்கள் மாறினாலும் மாறாது தொடரும் தந்தைமை ஆதிக்கமதிப்பீடுகள், நாளை நிச்சயமற்றுப் போனதால் இன்றே காதல் செய்யவேண்டிய தவிப்பு, அத்தவிப்பிலும் சுயம் இழக்காமல் இருக்க விரும்பும் உறுதி, பெயர் தெரியாத மரங்கள்,பூக்கள் மத்தியிலும் நகரும் வாழ்க்கை பெயர் தெரிந்தவை எல்லாம் மாறிப்போன கொடுமை என்று விரிகின்றன கேள்விகள்.



~ஒலிக்காத இளவேனில்| தொகுப்புரையில்,
இவற்றினைத் தொடர்ந்து ஈழத்தின் கவிதை வழியினைக் கடந்து தொடர்ந்து ஈழத்தோடு அவர்களுடைய பண்பாட்டையும் நினைவையும் வௌ;வேறு விகிதங்களில் பகிர்கிற அல்லது பகிராத குறிப்பிட்ட சில பெண்களது அனுபவங்கள் ஊடாக ஓர் அந்நிய மற்றும் சமகால வாழ்வை இத்தொகுதி பதிய முனைகிறது.
இத்தொகுதி தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்வு முறைகளாலும் வேறுபடுகின்ற சமூகத்தில் வௌ;வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற உலகின் வௌ;வேறு நகரங்களில் உள்ளவர்களை உலகின் வௌ;வேறு நகரங்களில் உள்ளவர்களை இலங்கைப் பெண்கள் என்கின்ற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது. இதில் எழுதியிருக்கிற ஒவ்வொருவரது உலகும் ஒவ்வொரு தனித்தனி ஆட்களின் உலகங்கள்.

இவ்வாறு ஈழத்தை மையமாகக் கொண்ட தொகுதிகளின் நோக்கங்கள், இலக்குகள், உள்ளடக்கங்கள் அமைகின்றன.

இதில் ஒலிக்காத இளவேனில் தொகுதி வரை வெளிவந்த கூட்டுத்தொகைகளின் தலைப்புகளே பெண்களின் நோக்கத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

~சொல்லாத சேதிகள்| - பெண்கள் இதுவரைக்கும் பெசமுடியாதவை சொல்ல முடியாதவை இப்போது சொல்லப்படும் தன்மையையும்

~மறையாத மறுபாதி| - என்பது அர்த்த நாரீஸ்வரர் ஆய் ஆண் - பெண் என்ற பாலடையாளத்தில் ~மறையாத மறுபாதியாக அவள் உள்ளதையும்

~உயிர்வெளி| என்பது உயிரோடும் உணர்வோடும் கலந்த பெண்களின் காதலைப் பேசும் வெளியாக இருப்பதையும்

~பெயல் மணக்கும் பொழுது| என்பது, ஈரக்கசிவை மறந்து தீய்க்கும் நெருக்கடி மிக்க மண்ணிலிருந்து கசிவுகளை உடலிலும் மனத்திலும் சொல்லிலும் செயலிலும் சுமக்கும் பெண்களின் பெயல் அது என்பதையும்

~இசை பிழியப்பட்ட வீணை| என்பது, உணர்வுகளாலும் அன்பினாலும் இசை நிரம்பிய பெண் வெறும் கதையாயும், பொருளாயும் கசக்கிப் பிழியப்பட்டு அவளின் சுயமற்றுப் போன அபத்தத்தையும்

~எழுதப்படாத உன் கவிதை| என்பது பெண் அங்கீகரிக்கப்படாத அவலத்தையும்

~ஒலிக்காத இளவேனில்| என்பது, இதுவரை ஐரோப்பாவில் ஒலிக்காத புதிய குரல்களையும் அதே நேரத்தில் பேசப்படாத பக்கங்களையும் உணர்த்தி நிற்கின்றது.

இவ்வாறு கூட்டுக்கவித் தொகுதிகளின் தலைப்புகளே அவற்றின் நோக்கங்களையும் பெண் விடுதலையை உயர்த்தியும் அழுத்தியும் நிற்பதை வெளிப்படையாகக் காணலாம்.

3. கவித்தொகைகளின் பாடுபொருள்

உன்னதமான மனித குலத்தின் அரைப்பகுதியினராகிய தம்மை மனிதன் அற்ப வெறும் இயந்திரங்களாகவும் கருவிகளாகவும் கருதும் நிலை மாறவேணும் என்பது இன்றைய பெண்ணிலைவாதப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாகும் என்று ~சொல்லாத சேதிகள்| முன்னுரையில் சித்திரலேகா மௌனகுரு குறிப்பிட்டார். 1986இல் வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை இன்றுவரை நிறைவேறியது என்று கூறிவிடமுடியாது. புலம்பெயர்ந்த சூழலிலும் அடக்குமுறைகள் வேறுவகையில் தொடரவே செய்கின்றன. இன்றும் அதே கோரிக்கையே உள்ளது. புலம்பெயர்வு பெண்களுக்கு தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம் என்று சிலர் பேசினாலும் அது 100மூ உண்மையானது அல்ல. ~ஒலிக்காத இளவேனில்| (2009) தொகுப்பாளர்கள், ~தாம் ஒலிப்பதை மறுக்கின்ற சூழலின் மீதும் சுய மரியாதையின்றி அவமதிக்கப்படும் ஆண் - பெண் உறவுச் சிக்கல்களின் மீதும் பேச்சை ஒடுக்கும் குடும்ப நிறுவனங்களின் மீதும் சற்றேனும் இவை தம் வசனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இறுக்கமான சமூகக் கட்டமைப்பில் இத்தகைய பகிர்வுகள் மாற்றத்திற்கான சிறு சிறு சலனங்களே எனலாம் என்பதில் இருந்து நாம் அறியலாம்.

1986களில் ~சொல்லாத சேதிகள்| மூலம் வீறெய்தத் தொடங்கிய கவிதை மூலமான பெண்ணிய விழிப்புணர்வு, சிந்தனைத் தடங்கள் 1992இல் புலம்பெயர் சூழலில் இருந்து வெளிவந்த மறையாத மறுபாதி மூலம் இன்னும் அகலித்துக்கொள்ளத் தொடங்கியது. ~உயிர்வெளி| என்ற தனித்த பெண்களின் காதற் கவிதைகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. ~குடத்து விளக்கன்ன கொம்பன்னார் கரம் புறப்படா| என்று முத்தொள்ளாயிரம் கூறியிருந்தாலும் சங்ககால பெண்கள் சிலரின் காதல் கவிதைகள், ஆண்டாள் மரபில் தனித்த அடையாளத்தை இத்தொகுதி உண்டாக்கியமை முக்கியமானது. தமிழீழப் பெண்களின் கவிதையான எழுதாத உன் கவிதை பேசும் போது அடுப்படிக்குள் இருந்து பணிவிடை செய்த பெண் பேர்க்களத்தில் நிற்கும் அனுபவமும் பேசப்படத் தொடங்கிற்று. ~இசை பிழியப்பட்ட வீணை| மூலம் கூடைக் கொழுந்தின் சுமை போல் அவர்களை அழுத்திய பொருளாதார அரசியல், குடும்பச்சுமைகள் பற்றிப் பேசினர். பெயல் மணக்கும் பொழுது 2007 வரை ஈழத்தில் எழுதிய பெண்களின் கவிதைகளை பெண்ணெழுச்சி, காதல், காமம், போர் என்று பல தளங்களில் வெளிப்படுத்தியது. ஒலிக்காத இளவேனில் தேசம், புலம்பெயர்வு, பெண்ணின் வாழ்வியல் என்ற தளங்களில் பெண்ணின் உணர்வாயும் குரலாயும் ஒலித்தது.

இன்று 1986களில் இருந்த பெண்களுக்கான கலை இலக்கிய நெறியை உருவாக்குவது என்பது இலக்கிய நெறியை உருவாக்குவது என்பது பெண்மொழியை உருவாக்கல் என்ற தளத்துக்குள் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த பெண்ணியச் சிந்தனைதான் இன்று சர்வதேசியம் தழுவிய ஒன்றாகவும் மாறவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.

இதனை ~ஒலிக்காத இளவேனில்| தொகுப்பாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
~வடஅமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கிற இத்தொகுதியில் அமெரிக்காவில் 2001 செப்ரெம்பர் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதற்குப் பின்பான அரசியலில், ஓர் கால கட்டம் மறைமுகமாகவேனும் பேசப்பட்டிருக்கவேண்டும். ஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதன் விளைவுகள் பற்றி இப் பெண்களுடைய எழுத்திலும் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதே எமது விருப்பமாயிருந்தது. அதுவே தமிழ்க் கவிதைச் சூழலுக்கான வளர்முகமாகத் தோன்றிற்று.

இதையே ~பெயல் மணக்கும் பொழுது| தொகுதிக்கு சேரன் காலச்சுவடு இதழில் எழுதிய மதிப்புரையில் வேறொரு விதத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.

~பெண்மொழியைப் பற்றி மட்டுமே பேசுவதை விடுத்து பெண்மொழி, பெண்ணிய அனுபவங்கள் என்கிற சாளரத்துக்கூடாக விரியும் புதிய வடிவங்கள், புதிய உறவு நிலைகள், புதிய பண்பாட்டுக் கோலங்கள், புதிய கலாசார இலக்கணங்கள், புதிய பாலினஃ பாலியல்பு உறவுகள் என்பவற்றைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது|

எனவே 1996 - 2009 வரையான காலப்பகுதியில் வெளிவந்த கூட்டுக் கவிதைத்தொகுதிகள் வழியே பெண்ணிய எழுச்சியை, தடங்களை, விழிப்புணர்வை, எதிர்ப்பை, விடுதலை அவாவை, புலம்பெயர்வுச் சூழலை, அங்குள்ள புதிய விலங்குகளை, பெண்மொழிக்கான பிரக்ஞைகளை, சர்வதேசியத்தைத் தொட்டுத் தழுவமுனையும் பெண்ணெழுத்தின் தரிசனத்தை தீர்க்கத்தை கிட்டத்தட்ட 25 வருடகாலத்தின் ஊடாக ஒரு வரலாற்றைப் போல் தரிசிக்க முயல்வோம்.

அடிமைத்தனத்தை இனங்காணல்,ஆணாதிக்க எதிர்ப்பு, அடிமைத்துவ கலாசார எதிர்ப்பு, புதிய சூழலிலும் பழைய விலங்குகளை இனங்காணல், ஆண்-பெண் சமத்துவக்குரல்,புலம்பெயர் வாழ்வு சாதக-பாதகம், பாலியல் திருப்தியீனங்களின் வெளிப்பாடும்-உணர்வும், ஒருபாலுறவு, சர்வதேசப்பின்னணியில் தன்னை இனங்காணல், அடையாளச்சிக்கல்கள், தனிமை, போர் வாழ்வு, வன்முறை எதிர்ப்பு பெண் மொழிப்பிரக்ஞை என்று பல தளங்களில் பெண்களின் கவிதைகள் ஏதோவொரு வழியில் தொடர்ந்;தும் இயங்குவதை இத்தொகுதிகளின் பொதுப் பண்பாகக் காணமுடியும்.

3.1 அடிமைத்தனத்தை இனங்காணல்

‘வானில் பறக்கும் புள் எல்லாம் நாணாக மாற’ எண்ணிய பெண்
‘அம்மியும் பானையும்
தாலியும் வேலியும் என்னை நிலத்திலும்
நிலத்தின் கீழ்
பாதாள இருட்டிலும்’
(சங்கரி)

அழுத்தும் நிஜத்தினை கனவுடைந்த குரலோடு இவர்கள் கவிதைகள் வெளிப்படுத்தின. . இது இந்த நிலத்தில் மாத்திரமன்றி
குளிரோ வெயிலோ
காலத்தோடு புணர்தல்
கடமைக்காய்ப் பம்பரமாதல்
புலம்பெயர்ந்த போதும்
மாறுபடாத ஒன்று
(சுமதிரூபன்)
என்று புலம்பெயர் சூழலிலும் தொடர்ந்தபடியிருக்கிறது. இதனையே ஆழியான்,

என் ஆதித்தாயின் முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும்
ஒவ்வொரு முகத்திலும்
தழும்பாய்
படர்ந்து கிடக்கிறது
என்று வெளிப்படுத்துகிறார்.


3.2 ஆணாதிக்க எதிர்ப்பு

பெண்ணை என்றும் பேதையாகவும்
வீரபுருச நாயகனாகவும்
நோக்கும் வரைக்கும் எனது நேசமும்
பேதை ஒருத்தியின் நேசமாகவே
ஊனக்கும் தெரியும்
(சங்கரி)

ஏன்ன செய்வது
நான் விடுதலை அடைந்தவள் உன்னால்
அந்த உச்சிக்கு வர முடியாதே

என்று சொல்லாத சேதிகளில் வெளிப்பட்ட பெருமிதம் ஆணின் மொழியை அதிகாரத்தை இன்னும் மூர்க்கமாக எதிர்ப்பதாக ஒலிக்காத இளவேனில் தொகுதிக் கவிதைகளை நாம் காணலாம்.


திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி
(ஜெபா)

ஏன்று ஆண்களால் திணிக்கப்பட்ட வாழ்க்கையை அவர்கள் வெறுத்தார்கள்.

அவரின் மகள்
இவரின் மனைவி
உங்களின் தாய் என்பதைவிட
நான் என்பதாக
விட்டுச் செல்ல விரும்புகிறேன்
எனக்கான என் சுவடுகளை.

ஏன்று ஆணினால் திணிக்கப்படும் வாழ்க்கையை, அமைப்பை அவர்கள் வெறுத்தார்கள். தமது தனித்துவத்தை நிறுவுவதை விரும்பினார்கள்.

3.3 ஆண் பெண் சமத்துவக்குரல்கள்

“விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை” (சிவரமணி) என்றும்

“புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே” என்றும் விடுதலைக்குரல்கள் சொல்லாத சேதிகளில் ஒலித்தது.

சமையல் தொடங்கி
படுக்கை வரை
இலவசசேவை வழங்கியது போதும்
………..
சூழவுள்ள சகலவற்றிலும்
உனக்கும் சமபங்குண்டு
வெளியே வா (மைத்திரேயி) என்று மறையாத மறுபாதியிலும்

நீயும் நானும்
திறப்புகளை வீசிவிட்டு
வெளிNயு வருவோம்
கொஞ்சம் வாழ்வதற்கு

என்று ஒலிக்காத இளவேனிலிலும் அந்தக்குரல்கள் தொடர்ந்து ஒலிப்பதைக் காணலாம். பெயல் மணக்கும் பொழுது தொகுதியில்
ஆண்களின் அதிகாரத்தை மீசைப்புடையனாக இனங்கண்ட பெண்(அனார்) தான் ஆமையாக ஆக்கப்படுவதை உணர்கிறாள்(விஜகலா). வெளவாலாகவேனும் தன்னிருப்பை நிறுவவேண்டும்(வாசுகி) என்று தலைப்பட்டு நிற்பதையும் தரிசிக்கிறோம்.





3.4 போர் வாழ்வைப் பேசலும் - எதிர்வினையும்

போர் வாழ்வின் அவலத்தை, வன்முறையின் கொடூரத்தை, புலம்பெயர் சூழலிலும் அகாலத்தில் நிகழும் சாவுகளின் அபத்தத்தை, சிறுவர்களை போருக்குப் பயன்படுத்தல் மீதான எதிர்வினையை, தம் அவலத்தை மாத்திரம் அல்லாது வேறொருவனின் துயரிலும் தன் நாட்டுத் துயரைக் காணும் மனத்தை என்று பல தொடர்ச்சிகளை பெண்ணிலை நின்று அவர்களின் கவிதைகள் பேசுகின்றன.

தெருப்புழுதியில் உன் உடம்பு
முதுகெல்லாம் இரத்த வெள்ளம்
நீதானா என்று குனிந்து பார்த்தேன்
ஓம் ராசா நீயேதான்
‘ஏன் ஆச்சி அழுகின்றாய்?’
என்று கூடிநிற்கும் சனம் கேட்க
“பொடியனைத் தெரியுமா உனக்கு?”
என்று மிரட்டுகிறான் காக்கிச்சட்டை (சன்மார்க்கா –சொல்லாதசேதிகள்)

என்று தன்மகனையே மகனென்று காட்டமுடியாத அவலத்தை ஒரு தாயின் புலம்பலாக சொல்லியது.

சோட்டியைப் பிடித்தபடி திரிந்த
பிள்ளையைக்
கொண்டு போனீர்கள்
குண்டுதாரியென வீரரென வந்து சொன்னீர்கள்
ஓ…ஓர் பிணத்திடம் சொன்னீர்கள் (ஒலிக்காத இளவேனில்)

என்று இளம்பிள்ளைகள் போரில் பயன்படுத்தப்படுவதை, ‘பிள்ளைகளின் பிணத்தில் நிலம் இருப்பதை’(கற்பகம் யசோதரா) ஒருதாயின் மாற்றுக்குரலாக இக்கவிதை பிரதிபலித்தது.
புலம்பெயர்சூழலில் அங்குள்ள வன்முறைகளுக்கும், அரசியல்களுக்கும் பிள்ளைகள் பலியாகும் பரிதாபமும் அங்கு ஏற்படத்தொடங்கியது. போர்ச்சூழலில் இருந்த தாயின் புலம்பல் அங்கும் வேறுவடிவத்தில் தொடரத் தொடங்கியது.

காவெடுத்தவர்கள் நினைக்கப் போவதில்லை
ஒரு பயித்தியக்காரியைப் போல
தமக்கான குழிகளை வெட்டியபடி
காத்திருக்கும் பெற்றவர்களை (தான்யா –ஒலிக்காத இளவேனில்)

எப்போதும் போரிலும் வன்முறையிலும் இலகு இலக்காக இருப்பவள் பெண்தான். அதற்கான எதிர்ப்பு கடும்தொனியில் கோணேஸ்வரிகள் கவிதையில் கலா(ரேவதி) வினால் வெளிப்படுத்தப்படுகிறது( பெயல்மணக்கும் பொழுது)

சமாதானத்திற்காய்ப் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்

……………

சிங்களச் சகோதரிகளே
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலை இல்லை

இதே கடும்தொனியை ஒலிக்காத இளவேனில் தொகுதியிலும் காணமுடிகின்றது. (நிவேதா)

அப்பாவின் உயிரைப் பறி
அக்காவையும் ஆருயிர்த் தோழிகளையும் சிதைத்து
பாழுங்கிணறுகளுக்குள் வீசியெறி
ஏன் என்னையும்
அணு அணுவாய்ப் பிடுங்கிப் போட்டு
குரூர இன்பங் கொள்.

இதற்கு இடையில்,
மெச்சாமலிருக்க முடியவில்லை
சீருடைக்காரரின் மீது காறி உமிழ்ந்து
மரணத்தைத் தழுவியு பெண்ணின் தன்மானத்தை.(நிவேதா)
என்ற பெண் சார்ந்த உணர்வையும் புரட்சிக்கான ஏற்றுக்கொள்ளலையும் தரிசிக்கமுடிகிறது.

எமது போர்வாழ்வை உலகவரலாற்றுடன் பொருத்தி நோக்கும் சர்வதேசிய வியாபகத்தை இப்போதும் எம் கவிதைகள் அடைந்துவருகின்றன. இது ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பெண்கவிதைகளின் ஒரு வளர்முகநிலையாகும்.

இன்று! பத்திரிகையின் முன்புறம்
மனம் நொந்து அழும்
ஒரு பலஸ்தீனக் கிழவன் முகம்
என் தாத்தாவின் அழுகையை
ஒத்திருந்தது ( பிரதீபா தில்லைநாதன்)

இதே போல பெண்ணினது மாதாந்திர இரத்தத்தை வரலாற்றின் குருதிக்கறையாக காணும் போக்கும்(மேலும் சில இரத்தக் குறிப்புகள் -அனார்) இங்கு முக்கியமானது.

3.5 புலம்பெயர்வு சாதக – பாதகம்

புலம்பெயர்வு சார்ந்த அனுபவங்களை மறையாத மறுபாதி, பெயல்மணக்கும் பொழுது,மை, ஒலிக்காத இளவேனில் ஆகிய கவித்தொகைகளில் இனங்காணமுடிகின்றது.

போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமமாய்ச் சிலிர்த்துக் கொள்கிறேன்
புலம் பெயர்ந்தமை தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்
ஏன் மகள்களுக்கும்
நம் பெண்களுக்கும். (வசந்திராஜா –பெயல் மணக்கும் பொழுது)

என்று முதலில் தோன்றினாலும் புதியபண்பாட்டுச் சூழலில் அது அகதி உணர்வையே அதிகம் விதைத்தது.

இரும்பு வலைப்பின்னல்
இடறுகின்ற தெருக்களில்
இலக்கின்றி அலைகின்ற
இலங்கைச் சருகு நான் (தயாநிதி – மறையாத மறுபாதி) என்று எண்ண வைத்தது.

கனவுகளும் கற்பனைகளும்
ஒளி கண்ட பனியாக
கலைந்து போகும் (மொனிக்கா – ஒலிக்காத இளவேனில்) தன்மையை அவர்கள் இனங்கண்டார்கள். ஓலிக்காத இளவேனில் தொகுதியில் புலம் பெயர்வு –குடும்பம், புலம்பெயர்வு –மாணவம் என்ற தனி அலகுகளில் கவிதைகள் பகுத்து வழங்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. தாம் மாத்திரமன்றி அந்த நிலத்துப் பூர்விக குடிகள் கூட வெள்ளையர்களால் சுரண்டப்படுவதையும் அடக்கப்படுவதையும் பெண்கள் அக்கறையோடு பதிவு செய்கின்றமை முக்கிய விடயமாகும்.

3.6 பாலியல் துஸ்பிரயோகம் - பாலியல் திருப்தியீனங்கள் - ஒரு பாலுறவு

பெண்களின் கவிதைகள் ஆண்கள் தம்மைப் போகப்பொருள்களாய்ப் பார்ப்பதையும், அறியாப் பருவத்தில் தம்மைச் சிதைக்கும் ஆணின் உடலதிகாரத்தையும், அதற்கான எதிர்வினையையும், அடுத்த கட்டத்தில் தமது பாலியல் திருப்தியீனங்களையும் வெளிப்படையாகப் பேசுகின்றன. அது மட்டுமல்ல ஒரு பாலுறவு விருப்பத்தையும் சொல்லிநிற்கின்றன.

பெண்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளைப் பேசுகின்ற உயிர்வெளி காதல் கவிதைகள் மிக முக்கியமான தொகுதியாகும்.

அதே நேரத்தில் சொல்லாத சேதிகள் தொகுதியில்

எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்;
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம் (சங்கரி)

போகப் பொருளாக மாத்திரமே பெண்ணைப் பார்க்கின்ற அபத்தம் சொல்லப்பட்டது.


அறியாப் பருவமதில்
அந்தரங்கங்கள் அத்துமீறப்பட்டு
கதறித் துடித்தபடி
கண் விழித்திருந்த
இரவுகளினதும்
இவர்களது அருவருப்பூட்டும் தீண்டல்கள்
கலைத்துப் போன கனவுகளினதும்
நீட்சியில்
கற்பனையின் எல்லைகளை மீறுவதாயிருக்கிறது
இவர்களில் ஒருவனோடு
காதலில் வீழ்வது. (நிவேதா – ஒலிக்காத இளவேனில்)

என்று ஆண் மீதான வெறுப்பும் சிறுவயதில் பெண்ணுடல் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்த கட்டமாக பெண்ணானவள் தன்னுடைய ஆசைகளை அந்தரங்கங்களை பேசும் நிலைக்கு முன்னேறிவிட்டாள். இதன் முகிழ்ப்பாய் பாலியல் திருப்தியீனங்களை அவள் பேசத் தலைப்படுவதைக் குறிப்பிடலாம்.

முத்தங்களாகிக் கலவியில் மயங்கி
இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி
கரைந்து போகும் அடுத்த கணமே
நீ ஆணாகிவிடுகிறாய்
……….
ஓவ்வொரு நாளும்
பைத்தியமாகிறது உறவு
………..
எதையும் நீ புரிந்ததில்லை (பாமினி)

எல்லாம் முடிந்து
அமைதியாய்த் தூங்குகிறான் அருகே.
ஏன் இத்தனைய நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின் முன்
ஒழுகிக் கிடக்கிறது கட்டிலின் கீழே. (மைதிலி)

மேலும் கற்பின் ஒழுக்கக் கோடுகள் கூட அழிந்து போய்விடுவதையும் பெண்களின் கவிதைகள் பேசுகின்றன.

குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதி;ல்லை

காதலனுக்காகக் காதலியும்
மனைவிக்காக கணவனும் என்ற
எல்லை தாண்டப்படுகிறது
நம்பிக்கை காயப்படுத்தப்படுகிறது (ரேவதி – ஒலிக்காத இளவேனில்)

இது மாத்திரமல்ல ஆணரசியலுக்கு ஆதிக்கத்துக்கு எதிராக ஒரு பாலுறவைக் கூட பெண்களின் கவிதைகள் பேசத்தலைப்பட்டுவிட்டன.


3.7 பெண்மொழியைக் கட்டமைத்தல்

பெண்ணனுபவங்களைப் பகிர்தல் பிரச்சினைகளை எடுத்துரைத்தல் என்பது ஆண்கள் உருவாக்கிய கலை இலக்கியச் செந்நெறியிலேயே நிகழ்ந்தது, அதே போல அவர்கள் மொழியும் எழுதும் மொழியிலேயே தம் எழுத்துக்களையும் கொண்டுவந்தனர். ஆயினும் பெண்ணியச் சிந்தனைகளின் வருகை இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த விழைந்தது. சொல்லாத சேதிகள் தொகுதி முன்னுரையிலே (1986) பெண்களுக்கான கலை இலக்கிய நெறியை உருவாக்கவேண்டியதன் அவசியம் கூறப்பட்டிருந்தது. இன்று பெண்மொழி பற்றிய பிரக்ஞை அதிகரித்து வருகிறது. இதை அவர்களின் கவிதைகளிலும் காணலாம்.

ஏதுமற்ற வெளியில் குருதி துளிர்க்க
காற்றைக் கிழித்து சுழன்று கீழிறங்கும்
மனச்சாட்டையின் முறுக்கிய மொழியில்
என் முலைகளுக்கு நான்
பேசக் கற்றுக் கொடுத்தேன்

இனியெதற்கு என் தயவு?
முலைகளே பேசட்டும்…
கழுத்தை நெரிக்கும்
‘ஆம்பிளை’த்தனங்களைப் பற்றி..
குhல்களைப் பிணைக்கும்
யுத்த சங்கிலியைப் பற்ற.p…..
இன்னமும்,
அந்தரத்தில் அலைவுண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி (நிவேதா – ஒலிக்காத இளவேனில்)

முலை என்பது தனியே முலை என்ற பெண்ணுறுப்பு மாத்திரமல்ல. அது பெண்ணின் அடையாளம். அவளின் ஊற்று அடையாளம். இதனால்தான் திருமாவுன்னி முலை திருகி எறிந்து தன் எதிர்ப்பைக் காட்டினாள். கண்ணகி ஒரு முலையெறிந்து மதுரையெரித்துக் கோபம் காட்டினாள். குட்டிரேவதி தன் கவிதைத் தொகுப்பிற்கு ‘முலைகள்’ என்று தலைப்பிட்டாள். இங்கு முலைகள் பெண்மொழியின் அடையாளமாய் நிற்கின்றன.



சப்பட்டையர்கள் கறுவல்கள் சோனிகள்
தொடருகிற உன் துவேசங்கள்
நான் தாயாக அரவணைக்கிற
குழந்தைகளை அண்டவிடேன்
வஞ்சனையை மனித குரோதத்தை பகைமையை
கொண்டு ஆடுகிற மொழி
அழிந்தால் என்ன?

ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ
மரணத்திற்குப் பழகியோ போகாதவரை
அவர்களுடைய எந்த மொழியும்
எனது மொழியே ( பிரதீபா – ஒலிக்காத இளவேனில்)

இங்கு ஆண்மொழியின் குரோதம், வன்முறை சுட்டப்படுவதோடு பெண்மொழியின் மென்னுணர்வும் பகிரப்பட்டுள்ளது.


இவைதவிர “ கூடையைத் தூக்கித் தூக்கி
கூனிப் போனது எங்கள் வாழ்க்கை” என்று துன்பக் கேணியாய் விளங்கும் மலையகச் சூழலையும் பல விடயங்களையும் பேசி நிற்கின்றன.

இவ்வாறு பல உள்ளடக்கங்களை விரிந்ததளத்தில் கூட்டுக் கவித்தொகைகள் பேசியுள்ளன.


4. பெண் கவிதைகளின் வெளிப்பாடு மற்றும் அழகியல்

இந்தக் கவித்தொகைகள் ஈழக்கவிஞைகளை அடிப்படையாக் கொண்டு ஈழம், தமிழகம், புகலிடம் என்ற இடங்களில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கின்றன. சில கவிதைகள் அடையாளத்திற்காகவும் ஆவணத்திற்காகவும் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக, மலையகப் பெண்கவிஞைகளின் ‘இசை பிழியப்பட்ட வீணை’ உள்ளடக்கத்திற்காகத் தொகுக்கப்பட்டது. அதனால் அத்தொகைக்கவிதைகளில் சிறந்தவெளிப்பாட்டையும் மொழியையும் எதிர்பார்க்கமுடியவில்லை. ஆனால் ஏனைய கவிதைகள் ஒப்பீட்டு ரீதியில் சிறந்த வெளிப்பாடும் மொழி எளிமையும் இலாவகமும் கொண்டவையாக அமைந்துள்ளன. விரிவஞ்சி அவற்றின் வெளிப்பாடு அழகியல் ஆகியவை இங்கு ஆராயப்படவில்லை. உள்ளடக்கம் மாத்திரமன்றி அவற்றின் வெளிப்பாடும் பெண்மொழி நோக்கிய பயணமும் இவற்றின் நிலைப்புக்கு சான்றாகி வருகின்றன.



5. முடிவுரை

1986 இல் வெளிவந்த “சொல்லாதசேதிகள்” கவிதைத்தொகுதி ‘முன்மாதிரியாக அமையத்தக்கது’ என்ற குறிப்புடன் வெளிவந்தது. அன்றிலிருந்து, ஒலிக்காத இளவேனில் (2009) வரை ஈழத்துப் பெண்களின் கவிதைகளைக் கொண்ட பலதொகுதிகள் வௌ;வேறு காலங்களில் வெளிவந்திருக்கின்றன. இவற்றின் மூலமாக ஈழத்தின் பெண்ணிய அனுபவங்களையும், சிந்தனைகளையும் ஒரு வரலாற்று நோக்கில் அறிந்துகொள்ள முடியும். ஈழத்தின் போர்ச்சூழல், பெண்ணின் காதல் அனுபவங்கள், புலம்பெயர்வு வாழ்வு, மலையக வாழ்வு, போர்க்களத்தில் போராளியாக அனுபவம், புதிய வாழ்வு முறைகள், அவை மாற்றியமைக்கும் சொல்முறைகள் என்று பலவற்றை இவை நிகழ்த்திக்காட்டுகின்ற போது அவற்றின் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது. இஸ்லாமிய பெண்நிலை அனுபவங்களும் சேர்ந்து கொள்கின்றன. அன்பு, எதிர்ப்பு, மாற்றுக்குரல், கோபம், மகிழ்ச்சி, ஆற்றாமை என்று பல சுருதிகளில் இயங்கும் அனுபவங்களை ஒரு சேர படிக்கும் போது அவர்களின் தனியான கலை இலக்கிய நெறி மெய்ப்பட்டுவருவதும், பெண்மொழி உருவாகி வருவதையும் தரிசிக்கமுடிகிறது. ஈழத்தினைக் களமாகக் கொண்டிருந்த தொகுதிகள் தமிழகம், புகலிடம் என்று பதிப்புப் பெறுவதும் கவனம் பெறுவதும் இவற்றின் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றன. ஈழத்துப்பெண்களின் கவிதைகள் தமிழகப் பெண்கவிதைகளைவிட இறுக்கமான தளத்தில் இயங்குகின்றன என்பதையும் எழுந்தமானபோக்கு அற்றவை என்பதையும் இவை மெய்ப்பிக்கின்றன. ஈழத்துத் தமிழ்ப் பெண்களின் கவிதைகள் அவற்றின் சிந்தனையாலும், உள்ளடக்கத்தாலும், வெளிப்பாட்டு அழகியலாலும், மொழித்திறத்தினாலும் என்றும் பேசப்படும் - நிலைத்து நிற்கும் என்றால் அவை மிகையில்லை.





உசாத்துணை நூல்கள்

1.சொல்லாத சேதிகள், சித்திரலோகா மௌனகுரு, பெண்கள் ஆய்வு வட்டம்,1986.
2.மறையாத மறுபாதி – புகலிடப் பெண்கவிதைகள், புகலிடக்கருத்து இலக்கியம்,1993.
3உயிர்வெளி,.சித்திரலேகா மௌனகுரு (தொ.ஆ) சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 1999.
4. பெயல்மணக்கும் பொழுது மங்கை,அ (தொ.ஆ) , , மாற்று, சென்னை. 2007
5. இசை பிழியப்பட்ட வீணை, றஞ்சி, தேவா(தொ.ஆ), ஊடறு, 2007.
6.மை, றஞ்சி,தேவா(தொ.ஆ), ஊடறு,2007.
7.ஒலிக்காத இளவேனில், தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன்(தொ.ஆ) வடலி, 2009.



8.உரத்துப் பேச, ஆழியாள், மறு, சென்னை, 2000.
9.சிவரமணி கவிதைகள், சித்திரலேகா மௌனகுரு(ப.ஆ), பெண்கள் ஆய்வு வட்டம், 1993
10. ஞானம் நூறாவது இதழ் - செப்ரெம்பர் 2008 ;சித்திரலேகா மௌனகுரு - ஈழத்தில் பெண்கள் இலக்கியம்
11.கலைமுகம் 50 ஆவது இதழ் - 2010, ஈ.குமரன், ஈழத்துப் பெண்களின் சிந்தனையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சொல்லாத சேதிகள்



















;



1 கருத்துரைகள்:

ஷஹன்ஷா said...

நல்ல கட்டுரை....முன் சில பந்திகளை படித்தேன் ஈர்த்து விட்டது....

நாளைக்கு முழுவதும் படித்து முடிப்பேன்...

தொடர்ந்தும் எழுதுங்கள் ஆசிரியரே..அண்ணா...

இதையும் பாருங்கள்
http://sivagnanam-janakan.blogspot.com/

Post a Comment