மகாகவி பாரதியாரும் கவிதைச் சிந்தனைகளும்




---த.அஜந்தகுமார்

பாரதி தமிழுக்கும் தமிழ்க்கவிதைக்கும் கிடைத்த ஒரு கொடை. 1882 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதி பாரதி பிறந்தான். “பாரதி” என்ற பெயர் தமிழ்க்கவிதை மரபில் ஒரு மந்திரம். அவனை உச்சரிக்காமல் நாம் தமிழ்க்கவிதையை நினைத்துவிடமுடியாது. தான் வாழ்ந்த சமூக –தேசிய சூழலுடன் தன்னைப் பிணைத்தும் உள்ளீர்த்தபடியும் தன்னைத் தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தியவன் பாரதி. இலக்கியப் படைப்பாளியாக, பத்திரிகையாளனாக, சமுதாயசிந்தனையாளனாக , நாட்டுவிடுதலைப் போராளியாகப் பல நிலைகளில் இவன் செயற்பட்டவன். பேராசிரியர் கா.சிவத்தம்பி,

“மகாகவி என்பவன் கடந்த காலம் பற்றிய விளக்கத் தெளிவும் நிகழ்காலம் பற்றிய ஆய்வறிவும் எதிர்காலம் பற்றிய கற்பனாதரிசனம் உடையவனாகவும் விளங்குவான்…..அதாவது இலக்கியப்பாரம்பரியத்தின் திசை திருப்பியாக மகாகவி இருப்பான்”

என்று கூறியது போலவே பாரதி மகாகவியாக பாரதி இலங்கினான் -இயங்கினான். தன் ‘மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி’ கவி பாடிய வல்லவன் இவன். அவனின் பிறந்த நாளான இன்று அவனின் கவிதைச் சிந்தனைகளை ஒரு முறை மீட்டிப் பார்ப்பதே சுகம் தரும் ஒரு அனுபவம்தான்.

;ஆடுதல் பாடுதல் கவி ஆதினைய கலைகளில்
ஈடுபட்டென்றும் இருப்பவர் - பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்;;’

என்று பாடிய பாரதி தேசத்துக்காய் - சுதந்திரத்துக்காய் -சமூகவிடுதலைக்காய் பாடினான்,பாடுபட்டான். இதனாலேயே,

‘ வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்று பதவி கொள்வார்’
என்று நம்பினான்.- பாடினான். இதனாலேயே தன்னை ‘இருங்கலைப் புலவனாக்குதி’ பாஞ்சாலி சபதத்தில் பராசக்தியிடம் அவன் வேண்டினான். ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’ என்று வெறுமனே அவன் பாடிவிடவில்லை.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்

என்ற தெளிவுடையவனாகவும் உறுதியுடையவனாகவும் இருந்தான். அதே நேரத்தில் தனக்கு முன்னிருந்த கவிமரபை ஆய்ந்து அறிந்த மேதையாக இருந்தான்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
ப+மிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

என்று இவன் பாடியதில் கவிமனத்தையும,; ஆய்வுமனத்தையும் காண்கின்றோம். இன்னும் மேலும் ,
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’
என்று அவாவி நின்றான். பாடினான், சாதித்தான்.


தான் கவிதை பாடவேண்டிய தேவையை தெய்வம் தன்னை இன்ன இன்ன காரணங்களுக்காக கவிபாடச் சொன்னது என்று பின்வருமாறு பாடுகிறான்.

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டெனும் ஓர் தெய்வம்:
பண்ணிலின்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டியெங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே

இதில் இவன் கவிதைச் சிந்தனைகள் சமூகத்தையே சுற்றிச் சுற்றி நிற்பதைக் காணலாம். ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்பதே இவன் கனவாக இருந்தது.

‘புதியன விரும்பு’ என்று புதிய ஆத்திசூடி சொன்ன பாரதி, ‘மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமடா’ என்று சொன்ன பாரதி,

‘சுவை புதிது பொருள் புதிது
வளம் புதிது சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை எந்நாளும்
அழியாத மகாகவிதை’ களைப் பாடினான். இதனாலேயே துணிந்து,

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழிலேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையென்னும்
வசையென்னாற் கழிந்த தன்றே

என்று பெருமிதத்துடன் பாடமுடிந்தது.

‘தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்’ பாரதியின் திண்ணமான எண்ணமாக இருந்தது. இதனை பாஞ்சாலி சபத முகவுரையில்,

‘ எளிய பதங்கள் எளிய நடை எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருசத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்திற்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்தல் வேண்டும்’

என்று கூறுவதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்..

பாரதி பாடிய தேசியப்பாடல்களும் பக்திப்பாடல்களும் வேதாந்தப் பாடல்களும் முப்பெரும் பாடல்களும் தனிப்பாடல்களும் வசனகவிதைகளும் அவன் ஆளுமையின் விகசிப்புகளாய் இன்றும் நின்று நிலைக்கின்றன.

“ தேவாரத்திலும் திருவாசகத்திலும் திருவாய்மொழியிலும் திருக்குறளிலும் கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்கு தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை “

என்று பாரதி தன்னுடைய கட்டுரை ஒன்றிலே எழுதினான். அதே போல பாரதியைப் படிக்காதவர்கள் தமிழனாகவோ தமிழபிமானியாகவோ இருக்கமுடியாது, இருப்பதில் அர்த்தமும் இல்லை.


நன்றி : உதயன் - வலம்புரி dec.2009

0 கருத்துரைகள்:

Post a Comment